வரும் வாரத்தில் நாடுபூராகவுமுள்ள 370 சதொச கிளைகளிலும் 12 இலட்சம் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார்.
இன்று (08) வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொசத் தலைமையக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
வரட்சி காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேங்காய் தட்டுப்பாட்டினால் தேங்காயின் விலை திடீரென அதிகரித்தது. இதனை கருத்திற் கொண்டு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய தேங்காய்களை கொள்வனவு செய்து சதொச ஊடாக குறைந்த விலையில் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சதொச நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.
இதற்கமைய கால்நடை வள சபை ஐந்து இலட்சம் தேங்காய்களையும், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் மூன்று இலட்சமும்; , குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் மூன்று இலட்சமும், அல்கடுவ பெருந்தோட் சங்கம் ஒரு இலட்சமும் இதன் பிரகாரம் மொத்தமாக 12 இலட்சம் தேங்காய்களை எதிர்வரும் வாரம் முதல் சதொச ஊடாக விநியோகிக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டிசம்பர் மாதப் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு இன்னும் 5 இலட்சம் தேங்காய்களை கொள்வனவு செய்து மொத்தமாக 17 இலட்சம் தேங்காய்களை நாடு பூராகவுமுள்ள சதொச கிளை மூலம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மொத்த கூட்டறவு விற்பனை நிலையத் தலைவர் றிஸ்வான், கால்நடை வள சபை பொது முகாமையாளர் உபாலி ஜயவரத்தன, சிலாப பெருந்தோட்ட நிறுவனத் தலைவர் ஆசிரி ஹேரத், எல்கெடுவ பெருந்தோட்ட நிறுவனத் தலைவர் நிலூ விஜேயதாச, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க ஆகியோர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பரீட் இஸ்பான்