சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமூச்சாக பாடுபட்டு வந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நின்று தடுத்து விட்டதை மக்கள் உணர்ந்து விட்டனர். இதன் காரணமாகவே அங்கு போராட்டங்கள் வலுவடைந்து தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்டத்தில் 1000 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டத்தின் கீழ் மாவடிப்பள்ளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மூக்கு கண்ணாடி விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
“சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்தே கடந்த பொதுத் தேர்தலில் அந்த மக்களின் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் சூறையாடியிருந்தது. அத்தேர்தலின்போது நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக களமிறங்கியபோது எனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்தில் பாரிய எழுச்சி ஏற்பட்டது.
மக்கள் அலை அலையாக அணி திரண்டு எமது கட்சியை ஆதரிக்க தயாரான வேளையில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கல்முனைக்கு அழைத்து வந்து, தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்கித்தரப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியே தமது வாக்கு வங்கியை முஸ்லிம் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது.
ஆனால் தேர்தல் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்காமல், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் விரைவில் கிடைக்கும்- விரைவில் கிடைக்கும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரையும் உலமாக்களையும் பொது அமைப்புகளையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தனர். அவர்கள் வழங்கியது பொய் வாக்குறுதி என்றும் அவர்கள் நயவஞ்சகத்தனமாக செயற்பட்டு ஏமாற்றுகின்றனர் என்றும் நான் பகிரங்கமாகவே கூறி வந்தேன்.
இவ்வேளையில்தான் எனது வேண்டுகோளின் பேரில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவை சாய்ந்தமருத்துக்கு அழைத்து வந்து, வாக்குறுதி வழங்கியதுடன் முஸ்லிம் காங்கிரசின் நாடகத்தையும் அம்பலப்படுத்தினோம். அதனைத் தொடர்ந்து நாம் அமைச்சர் பைசர் முஸ்தபாவை அடிக்கடி சந்தித்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்திக் கொண்டிருந்தோம்.
அதன் பிரகாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கையை அமைச்சர் பைசர் முஸ்தபா எடுத்திருந்தார். ஆனால் இறுதிக் கட்டத்தில் ரவூப் ஹக்கீமும் ஹரீஸும் சேர்ந்து அதனை தடுத்து விட்டனர். இது பற்றி பிரதி அமைச்சர் ஹரிசே கல்முனைக்குடியில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
சாய்ந்தமருது நகர சபைக்கு முஸ்லிம் காங்கிரசும் ஹரீஸும் தான் தடை விதித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நான் ஆரம்பம் தொட்டே கூறியபோதெல்லாம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் மக்களும் அதனை நம்புவதற்கு பின்வாங்கினர்.
ஆனால் சாய்ந்தமருது நகர சபையை தானே தடுத்து வைத்திருக்கிறேன் என்றும் சாய்ந்தமருது தனியே பிரிந்து செல்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனவும் கல்முனைக்குடியில் ஹரீஸ் வீறாப்பாக சூளுரைத்த பின்னர் அவர் எந்தளவுக்கு நயவஞ்சகத்தனமாக எம்மை ஏமாற்றி வந்துள்ளார் என்பதை சாய்ந்தமருது மக்கள் எல்லோரும் அறிந்து கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே சாய்ந்தமருதில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அண்மையில் அங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோருடன் சேர்த்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும். பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கோ உண்மையான போராட்ட குழுவினருக்கோ இதில் தொடர்பிருக்கவில்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சக்திகளின் சதியே ரிஷாத் பதியுதீனின் பொம்மை எரிப்பாகும். அதற்காக நான் மனம் வருந்துகின்றேன்.
எமது கட்சியும் தலைமையும் அன்றும் இன்றும் என்றும் சாய்ந்தமருது நகர சபைக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையை எவ்வாறேனும் நிறைவேற்றிக் கொடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் நானும் விடாப்பிடியாக நின்று, எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் சாதாரணமானவையல்ல.
அதனால்தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சாய்ந்தமருதில் இருந்து எப்படியாயினும் ஓரங்கட்ட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரசினர் கங்கணம் கட்டியுள்ளனர். அதனால்தான் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை கொடுக்க வேண்டாம் என அவரது காலில் விழுந்து கேட்டதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் கல்முனைக்குடியில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் சாய்ந்தமருது மக்களிடம் ரிஷாத் பதியுதீனை காட்டி கொடுத்து விட்டோம் என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்று மக்கள் அறியாமலில்லை.
இந்த சூழ்நிலையில் என்னை மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் இணைத்துக் கொள்ளலாம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள். அக்கட்சியின் தலைமைத்துவம் தனது சுயநலத்திற்காக எமது சமூகத்திற்கும் பிரதேசத்திற்கும் அநியாயம் இழைத்து வருகின்றது என்பதாலேயே நான் அக்கட்சியில் இருந்து விலகி, மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் போன்று நேர்மையும் துணிச்சலும் ஆற்றல் ஆளுமையும் கொண்டுள்ள அமைச்சர் ரிஷாத் பாதியுதீனின் மக்கள் காங்கிரசில் இணைந்தேன்.
இந்த அம்பாறை மாவட்டடத்திலும் தேசிய மட்டத்திலும் அவரது கரங்களை பலப்படுத்துவதற்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். அதனை இன்னும் உத்வேகத்துடன் முன்னெடுப்பேன். ஒருபோதும் முஸ்லிம் காங்கிரசில் இணைய மாட்டேன். அது சிலரது பகல் கனவாகும்” என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்