மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சிலாவத்துறையை நகரமயமாக்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய சார்ள்ஸ், தனது இனவாதக் கருத்துக்களை தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் உரையாற்றிய போதே, வடக்கிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, மற்றும் ஏனைய பிரதேசங்கள் உள்வாங்கப்படாமல் சிலாவத்துறையை மாத்திரம் உள்வாங்கப்படுவதின் நோக்கம் என்னவென கேள்வியெழுப்பினார்?அத்துடன் சிலாவத்துறை அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு கீழான நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது உரையை குறுக்கீடு செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறான கருத்துக்களைக் கூறி சார்ள்ஸ் எம் பி இனவாதம் பேசுகின்றாரென சுட்டிக்காட்டினார்.
சிலாவத்துறையில் வாழ்ந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த நகரம் காடாகியது. கடந்த 27 வருடங்களாக அந்த நகரத்தில் முஸ்லிம்கள் கால் பதிக்க எவருமே அனுமதிக்கவில்லை. அங்கிருந்த சுமார் 500 வீடுகள் முற்றாக அழிந்து போயிருந்தன. 22 பாடசாலைகளும், 24 பள்ளிவாசல்களும் தகர்த்தெரியப்பட்டன. பாதைகள் பயணம் செய்ய முடியாது காடாகின. இந்த நிலையில் சிலாவத்துறைப் பிரதேசத்தை நகரமாக்கும் முன்மொழிவை மேற்கொண்டதில் என்ன தவறு இருக்கின்றது.
வடக்கிலே 36 பிரதேச சபைகள் இருக்கின்றன. அவற்றில் சிலாவத்துறை அடங்கிய முசலி பிரதேசபை மாத்திரமே முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒன்றாகும். இந்த நிலையில் சார்ள்ஸ் எம் பி முற்று முழுதாக இனவாதத்தையே கக்குகின்றார். அத்துடன் சிலாவத்துறை மாத்திரமன்றி மன்னார் நகரத்தையும் நவீனமயப்படுத்தும் வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கோரிக்கைக்கமைய வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.
- ஊடகப்பிரிவு