உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மனுதாரர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து, வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையை நீக்க இன்று (30/ 11/ 2017) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரி, 06 பேரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமையை மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு கடந்த 22 ஆம் திகதி விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு, சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரினர். அதனடிப்படியில் இந்த இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.