Breaking
Mon. Jan 13th, 2025

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சாட்சியம் அளித்த நபர்களை கைது செய்தமை தொடர்பில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நியமித்த விசாரணைக்குழுவுக்கு சாட்சியம் வழங்கும் நபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் இலங்கை அரசிடம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது என அறியமுடிகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியம் வழங்கிய நபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டமை மற்றும் புலனாய்வுத் துறையினரின் தேவையற்ற விசாரணைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர்  பீரிஸிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என இலங்கை அரசு கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உறுதியளித்திருந்தது.

அந்த உறுதிமொழிக்கு ஏற்ப இலங்கை அரசு செயற்பட வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார் எனவும், புலனாய்வுப் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டினார் எனவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்பாக சாட்சியமளித்த சில குடும்ப பெண்களும் மற்றும் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறித்தும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் ஐ.நா. அதிகாரி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸிடம் கூறினார் எனவும் தெரியவருகின்றது.

Related Post