இலங்கையுடனான பொருளாதார வர்த்தக உறவை நிலைநாட்டுவதிலும், பேணுவதிலும் வளைகுடா நாடுகள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமிட் அப்துல் பத்தா காசிம் அல் – முல்லா தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 76வது தேசிய தின விழா கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில் இடம்பெற்ற போது, தூதுவர்; இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த விழாவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா, ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
‘அரபு அமீரகமும், இலங்கையும் பலமான உறவை கொண்டுள்ளதுடன், இருதரப்பு வணிகக்கூட்டு முயற்சி திட்டங்களை பரஸ்பரம் அமுல்படுத்தி வருகின்றது’ என்றும் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையும், ஐக்கிய அரபு அமீரகமும் 1979ம் ஆண்டு தொடக்கம் இராஜதந்திர உறவுகளை பேணிவருகின்றது. அரபு அமீரகத்தில் 122,000 இலங்கையர்கள் வாழ்வதோடு, அவர்கள் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர். எமது நாட்டவருக்கு தொழில்வாய்ப்பை வழங்கி அவர்களுடைய நலன்களைப் பேணிவரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இலங்கையர் சார்பில் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கின்றேன்’ என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
இந்த நாட்டில் அனர்த்தங்களும், இடர்களும் நேரிடும் போதெல்லாம் அரபு அமீரகம் கைகொடுத்தே வந்திருக்கின்றது. அதே போன்று, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகால அகதிகளாக வாழ்ந்து, தற்போது மீளக்குடியேற தொடங்கியுள்ள முஸ்லிம்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பல வீடமைப்புத்திட்டங்களையும் நலனோம்பு நடவடிக்கைகளையும்; அமுல்படுத்தி வருகின்றது.
குறிப்பாக வடக்கிலே முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் அந்த நாட்டின் தர்ம நிதியங்களான மக்தூம் தர்மநிதியம், துபாய் தர்மநிதியம், மஹ்மூத் நிதியம், ஷய்ட் சிட்டி வீடமைப்புத்திட்டம் மற்றும் இன்னோரன்ன பல திட்டங்களின் மூலம்; இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கணிசமான உதவிகளை நல்கியுள்ளது. அத்துடன்; இந்த மக்களின் வாழ்வியல் தேவைகளுக்காக பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகவுமுள்ளது எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தினதும் அந்த நாட்டின் தர்ம நிதியங்களினதும் இந்த உதவிகளுக்காக வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரத்தியேகமான நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான மொத்த வர்த்தக புரள்வானது 2016ம் ஆண்டு 1.3பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலராக இருந்தது. 2017ம் ஆண்டு முதலாவது காலாண்டு பகுதியில் 1.18பில்லியன் அமெரிக்க டொலராக அது அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி வீதம் எமது நாட்டின் ஏற்றுமதி அளவில் அதிகரிப்பையும்,; உற்பத்தியில் அதிகமான பெறுமதி சேர்க்கையையும் ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்த அமைச்சர் ரிஷாட், அரபு அமீரகம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு நாங்கள் ஆர்வமாகவுள்ளோம். குறிப்பாக உட்கட்டமைப்பு திட்டங்களில் அரபு அமீரகம் முதலீடு செய்வதை நாங்கள் பெரிதும் விரும்புகின்றோம் என்றும் கூறினார்.
2025ம் ஆண்டு இலங்கையை செழிப்பான நாடாக மாற்றும் தூர நோக்குடனேயே நாங்கள் செயற்படுகின்றோம். இந்து சமுத்திரத்தில் முக்கிய நாடாக விளங்கும் இலங்கையானது தற்போதைய பூகோள அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் தன்னை தயார்படுத்த வேண்டியிருக்கின்றது. அதற்கான மூலோபாயத்தை வகுத்து கொண்டு செயற்படுகின்றோம் என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
(சுஐப். எம். காசிம்)