எம்.எம்.ஏ.ஸமட்
இயற்கை செயற்கை அனர்த்தங்களினால் மனித குலம் இன்னியுரை தினமும் இழந்துகொண்டுதான் இருக்கிறது இப்பூமியில். அதற்கு இலங்கைத் திருநாடும் விதிவிலக்கல்ல. காலத்திற்குக்காலம் நிலவும் இயற்கை, செயற்கை அனர்த்தங்கள் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி விடுகிறது .
கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னதான 30 வருட காலப்பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையால் வடக்கு, கிழக்கு மக்கள் மாத்திரமல்ல முழு இலங்கை மக்களும் அச்சத்துடனும் அதிர்ச்சியுடனுமே வாழ்நாளை நகர்த்திக் கொண்டிருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.
தினமும் உயிர் இழப்புக்களும் அங்கவீனங்களும் இடம்பெயர்வுகளும் என யுத்த அனர்த்தத்தின் கோர விளைவுகள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டிருந்தன. அந்த நாட்கள் மக்கள் மனங்களிலிருந்து இன்னும் மறந்துவிடவில்லை.
அப்போதெல்லாம். குண்டு வெடிப்புக்களிலிருந்தும் கண்ணிவெடித் தாக்கங்களிலிருந்தும் மக்களைப் பாதுகாப்பதற்காக அறிவூட்டல்களும் விழிப்புணர்வூட்டல்களும் பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்து பஸ்களிலும,; ரயில்களிலும், பாதைகளிலும் வழங்கப்பட்டன. மக்கள் தங்களது பாதுகாப்புக்களை தாங்களாகவே காத்துக்கொள்ளும் ஒரு மன நிலைக்கு உள்ளானார்கள். இது செயற்கை அனர்த்தத்தின் விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அப்போது முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.
ஆனால், காலத்திற்கும் காலம் துன்பியல் நிகழ்வுகளைப் பதிக்கும் இயற்கை அனர்த்தங்கள் குறித்து அக்கறை கொள்வது குறைவாகவே உள்ளதை உணரமுடிகிறது.
இடி, மின்னல், வெள்ளம், மண்சரிவு, பூகம்பம், பூமி அதிர்ச்;சி, சூறாவளி, சுனாமி, வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து; மக்கள் தங்களை தாங்களாகவே பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்புணர்கள் பெறுவதும் விழிப்பூட்டப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெறுகிறா என்பது கேள்விக்குறியான விடயமாகும்.
2004 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் கரையோர மக்களை அதிர்ச்சிக்குள்;ளாக்கி, மாறாத ரணங்களை மனங்களில் ஏற்படுத்தி, ஆயிரமாயிரம் உயிர்களைத் துறக்;கச் செய்த அந்த சுனாமி பேரனாத்;தத்தின் ஒரு தசாப்த கால தினத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில்தான் இலங்கை மக்களை குறிப்பாக மலையக மக்களை அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த துயரத்துக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாக்கியுள்ளது ஹல்துமுல்ல மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம்.
இக்கட்டுரை எழுதப்படும் வரை மண்சரிவு அனர்த்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த உள்ளுர் ஊடகங்களின் புள்ளிவிபரங்கள் மாறுபட்டதாக உள்ளபோதிலும் ரயிட்டர் சர்வதேச செய்தித்தாபனத்தின் விபரங்களின் பிரகாரம், இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 120 மைல் தூத்திலுள்ள ஹல்துமுல்ல மீரியபெத்தயில் புதன்கிழமை நிகழ்ந்த கோர மண்சரிவினால் ஏறக்குறைய 200 ஏக்கர் நிலப்பரப்பு மண்ணுக்குள் புதையுண்டு போய்விட்டது.
களிமண்ணினாலும் தகடுகளினாலும் வேயப்பட்ட அரைகுறை அடிப்படை வசதிகளோடு அமைந்த ஏறக்குறைய 150 வீடுகளில் வாழ்ந்த அந்த மலையகத்தின் முதுகெழும்பான தேயிலை பறிக்கும் கூழித் தொழிலாளர்கள் ஏறக்குறைய 300 பேர் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள்
நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய வருமானத்துறையாக ஒரு காலத்தில் விளங்கிய தற்போதும் விளங்கும் தேயிலைக்காக தங்களது வியர்வைகளை விலைகொடுத்து வாழ்வின் பொழுதுகளை மண்ணுக்காக அர்ப்பணிக்கும் மலையக அந்த ஹல்துமுல்ல மக்களின் சாவுகள் முழு உலகின் ஊடகங்களையுமே பேசவைத்துள்ளது. மக்களைத் துயரத்தில் மூழ்க வைத்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாவிட்டாலும் நாம் நமக்குள்ள அறிவினூடாக, அறிவூட்டல்களினூடாக அவற்றிலிருந்து பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியும.; நாம் பாதுகாப்பை பெற்றும், பாதுகாப்பு நமக்கு கிடைக்கப்பெற்றும் நமது உயிர் இயற்கை அனர்த்தங்களினால் பிரிகிறது என்றால் அது இறைவன் விதி. அதை மாற்ற முடியாது. பாதுகாக்க முடியாது.
ஆனால், ஹல்துமுல்ல கொஸ்லாந்த மீரியபெத்த மக்களின் இன்னுயிர் மண்ணுக்குள் மாண்டுபோயிருக்கிறது என்றால் அது விதிக்கு அப்பால் விதியைத் தேடிக்கொண்டதாக அமைந்துவிட்டது. அல்லது அவர்கள் அந்த விதிக்குள் அகப்பட்டு மாண்டுபோகாகமல் தடுப்பதற்கான வழிகள் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்பதை வெளிவரும் தகவல்களின் ஊடாக அறிய முடிகிறது.
தேசிய கட்டட ஆய்வு நிலையம் 2005ஆம் ஆண்டும் 2012 ஆம் ஆண்டும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இப்பிரதேசம் வாழ்விடத்திற்கு பாதுகாப்பற்றது என அறிவிந்திருந்தது. இது தொடர்பில் தோட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ரயிட்டர் சர்வதேச ஊடகம் உட்பட உள்ளுர் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் வாழ்;ந்த மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர்களுககான மாற்றுக் காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்;. ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ள நிலையில,; மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிர்தப்பி சிகிச்சை பெறும் பிரதேசவாசியொருவர் அவ்வாறு எவ்வித மாற்றுக் காணியும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளமையையும் இக்கட்டுரையூடாக தெரிவிக்க முடிகிறது.
புதன் கிழமை கால 7.00 மணிக்கும் 7.45 மணிக்கும் இடையில் நிகழ்ந்ந இந்த கோர மண்சரிவினால் ஏறக்குறைய 3 கிலோமீற்றர் நீளமான குடியிருப்புப் பகுதி முற்றாக களியும் சதுப்பும் கலந்த மண்ணினால் மூடப்பட்டுக் காட்சியளிக்கும் சோகத்தில் ஹல்துமுல்ல மக்கள் உள்ள நிலையில், இந்த அனர்தத்திலிருந்து ஏறக்குறை 300 சிறுவர்கள் உயிர் தப்பியிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இக்கட்டுரை எழுதுவதற்காக செலவளித்த நேரம் வரை உயிர்நீத்த அல்லது காணமல் போயுள்ளதாகக் கருதப்படும் தோட்ட மக்களின் 10 சடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஊர், பிரதேசம் இனம், மதம், கோத்திரம் பதவி பட்டம் என்பவற்றுக்கு அப்பால் கொஸ்லந்த மீரியபெத்த தோட்டப் பிரதேசங்களில் மண்சரிவினால் மாண்டு போனவர்கள் அல்லது காணமல் போனவர்கள் எல்லோரும் மனிதர்கள் என்ற ரீதியில் அவர்களுக்காக கவலைப்படுவதும் அவர்களின் துயரங்களில் பங்கு கொள்ளுவதும் சக மனிதர்களின் மனிதாபிமானமாகும்.
இருப்பினும், இபபிரதேச மக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவை உரிய தோட்ட அதிகாரிகளினால் செயற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையிருக்குமாயின் இந்த அதிகாரிகள் தங்களது கடமைகளை துஷ்பிரயோகம் செய்தது மட்டுமல்ல மனித குலத்தின் அவலத்திற்கு காரணதாரர்களாகவும் இருந்திருக்கிறாhக்ள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அரசாங்கம் ஒரு கட்டளை பிறப்பிக்குமாயின் அதை செயற்படுத்துவது அதிகாரிகளின் கடமையாகும.; கட்டளைச் பிறப்பிக்கின்ற ஜனாதிபதியோ, அல்லது அமைச்சரோ அல்லது நிறுவனத் தலைவரோ நேரடிகாக செயற்பாட்டில் இறங்கி செயற்பட முடியாது. அதைச் செயற்படுத்துமாறு எந்த அதிகாரிக்கு பணிக்கப்பட்டதோ அந்த அதிகாரியின் பொறுப்பே அதைச் செயற்படுத்துவதாகும்.
குறித்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் எச்சரித்துள்ள போதிலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தோட்ட அதிகாரிகள் தவறியிருப்பதானது வெள்ளம் வரும் முன் அணைகட்டுவதற்கு செயற்படாத நிலை என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.
மண்சரிவு மாத்திரமல்ல எந்தப்பிரதேசங்கள் எந்தந்த இயற்கை அனர்தத்தங்களுக்கு உள்ளாகக் கூடிய பிரதேசங்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளதோ அந்ந பிரதேசங்களில் வாழும் மக்கள் அவை தொடர்பில் பாதுகாப்பு பெறுவதற்கான அறிவூட்டல்களும் விழிப்புணர்வூட்டல்களும் தொடர்ச்சியாக வழங்கப்படுவது அவசியமாகும்.
அத்தோடு, இத்தகைய அனர்த்தங்களின் முன்னரும் அனர்த்தங்கள் இடம்பெறும்போதும் அனர்த்தங்களின் பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய பூரண அறிவை அனைவரும் அறிந்து கொள்வதும் அவசியமாவுள்ளது.
அனர்த்தம் என்றால் என்ன? அதன் விளைவு எவ்வாறு இருக்கும்? அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு எத்தகையை நடைமுறைகள்; கையாளப்பட வேண்டும்? என்ற விடயங்கள் தொடர்பாக அனைவரும் அறிவதோடு, குறிப்பாக அனர்த்தங்களுக்கு உள்ளாகக் கூடிய பிரதேசங்;களில் வாழும் மக்கள் உரிய அதிகாரிகளினால் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
மாணவர்களினூடாக பெற்றோர்களுக்கும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களைச் சேர்ந்த சமூகத்திற்கும் இயற்கை மற்றும் மனிதனினால் ஏற்படும் அனர்;த்தங்கள்; குறித்தும் அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும் அறிவூட்டுவதை நோக்காகக் கொண்டு கல்வி அமைச்சினால் பாடசாலை மட்டத்;தில் ‘குமரபவ்ர’ நிகழ்ச்சித்திட்டம், அவசரகாலக ;கல்வி நிகழ்ச்சித்திட்டம், வடக்கு கிழக்கில் கண்ணிவெடி அனர்த்தக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் போன்ற பல்வெறு அனர்த்த முற்காப்புக்கான கல்வித்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளபோதிலும், நடைமுறைப்படுத்தப்படுகின்றபோதிலும் இந்நிகழ்ச்சித்திட்டங்கள் அதன் இலக்கை எந்தளவு எட்டியிருக்கிறது? இந்நிகழ்ச்சித்திட்டங்கள் அதிகாரிகளினால் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளனவா?
இந்த நிகழ்ச்சித்;திட்டங்களின் வெற்றிக்கு மாணவர்களினதும், ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும், சமூக அங்கத்தவர்களினதும் அதிகாரிகளினதும் ஒத்துழைப்புக்கள், செயற்பாடுகள் எந்தளவுக்கு பங்களிப்புச் செய்துள்ளன என்பதெல்லாம் ஆய்வுக்கும் மதிப்பீட்டுக்கும் பின்னூட்டல்களுக்கும் உட்படுத்தப்பட வேண்டியவையாகும்.
வெள்ளம் வரும் முன் அணைகட்டப்பட வேண்டும் அல்லது அணைகட்டுவிக்கப்பட வேண்டும். அனர்த்தங்கள் எப்போது ஏற்படும் என்று சரியாக கூற முடியாவிட்டாலும் கண்டு பிடித்து அறிவிக்க முடியாவிட்டாலும் அனர்த்தங்களுக்கான அறிகுறிகள் குறித்து அது தொடர்பான உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுப்பதற்கு உரிய அதிகாரிகள் செற்படுவதோடு பாதுகாப்புப் பெற மக்களும் ஆயத்தமாக வேண்டும். அலட்சிப் போக்கின்றி அவதானத்துடன் ஆயத்தமாகுவதற்கான மனநிலை ஏற்படுத்திக் கொள்வது நம்மை வீண் உயிர்பலியிலிருந்தும் சேதங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள வழிவகுக்கும்.
ஐந்து நாட்கள் தொடர்சியான மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் சிற்சில மண்சரிவு சம்;பவங்கள் புதன் கிழமைக்கு முன்னதாக ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேசத் தகவல்கள் குறிப்பிடுகின்றபோதிலும் அவை குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதில் தோட்ட மக்களும் அவதானக் குறைவுடனேயே செயற்பட்டடிருக்கிறார்கள். என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
சுனாமி ஏற்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில தற்போது கிழக்குக் கடலில் இருந்து உயிர் இனங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகிறது. இவ்வாறனதொரு நிலை 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி ஏற்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் அதிகளவிலான மீன்களும் பாம்புகளும் காணப்பட்ட சம்பவங்களை மக்கள் நினைவுபடுத்துவதுடன் தற்போது உயிர் இனங்கள் இறந்து கரையொதுங்குவது தொடர்பில் அச்சம் கொண்டுள்ளனர். இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள்ப்படுவது காலத்தின் தேவையாகும்.
எது எவ்வாறு நடைபெறுகின்றபோதிலும்,; இந்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்று தேவையானது அவர்களுக்;கான அன்றாட நாளைக் கழிப்பதற்கான அடிப்படை வசதிகளாகும.; அவற்றை அரசாங்கம் நிறைவு செய்து வருகின்ற போதிலும் முடிந்தவர்கள் தங்களால் முடியுமான உதவிகைளப் புரிவது மனித நேயமாகும்.
அத்துடன், குடும்ப உறவுகளை இழந்தவர்கள் ஆழாத்துயரில் உரைந்து போய் உள்ளார்கள. மண்சரிவிலிருந்து தப்பியவர்கள்; இழப்புக்களைச் சுமந்து வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடனடித் தேவைகள் நிறைவு செய்யப்படுவதுடன் அவர்கள் உள்ளங்கள் ஆற்றுப்படுத்தப்படுவதும் கட்டாயத்தேவையாகும் என்பது கவனத்திற்கொள்ளப்படுவதுடன் வெள்ளம் வரு முன் அணைகட்ட உரியவர்கள் ஆயத்தமாகவேண்டுமெனவும் துயரங்களினால் துன்பப்படுவோரின் வாழ்வு நம்பிக்கையோடு மீள எழ எமது பிரார்த்தனைகள் அவர்களைச் சேரட்டும் என்ற செய்தியை இக்கட்டுரை முன்வைக்கிறது.