Breaking
Sun. Jan 12th, 2025
கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 192 பேர் காணாமற் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரி வித்தது. சீரற்ற காலநிலைக்கு மத்தியி லும் நேற்று முன்தினம் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் 30-10-2014 சடலங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என களத்திலிருந்த பாதுகாப்பு தரப்பினர் கூறினர்.
எனினும் பெண்கள் அணியக்கூடிய பலவகையான ஆபரணங்கள் மீட்கப் பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை தொடருவதனால் மீட்புப் பணிகளை முழுமை யாக முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டிருந்தன. அப்பகுதியில் தொடர்ந்தும் மண்மேடுகள் சரிந்த வண்ணம் காணப்படுகின்றன. அபாயகரமான சூழ்நிலைக்கு மத்தியிலேயே முப்படையினரும் பொலிஸாரும் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் சம்வம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட வருகை தருவது மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்கு பாரிய நெருக்கடியை தோற்றுவித்தது.
சுமார் 40, 50 அடி உயரங்களுக்கு மண்மேடுகள் வீடுகளை மூடிக் காணப்படுவதனால் மீட்பு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான பாதையை உருவாக்குவதே சிக்கலாக அமைந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
எனவே பாதையை சீர்செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதுடன், சடலங்களை இனங்கண்டு கொள்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மண்சரிவு தொடர்ந்தும் சிறியளவில் அப்பிரதேசத்தில் இடம்பெற்று வருவதனால் மண்ணை அகழ்ந்து இன்னுமொரு இடத்தில் போட முடியாத இக்கட்டான சூழ்நிலையொன்று அங்கு உருவாகியுள்ளது.
அப்பிரதேசம் முழுவதும் சேறு நிறைந்துக் காணப்படுவதனால் மீட்பில் பாரிய மந்தகதி ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் பணிப்புரைக்கமை இராணுவ கமாண்டோ மற்றும் விசேட படைப் பிரிவினர், மணல் மேட்டில் பணியாற்றக் கூடிய நிபுணத்துவம் பெற்றோர் நேற்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மண் அகழ்விற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து பாரிய ரக இயந்திரங்களும் கொஸ்லந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதெனவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.
சம்பவத்தை தொடர்ந்து, மீரியபெத்த தோட்டத்தைச் சுற்றி ஏனைய தோட்டங் களைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பின் நிமித்தம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 243 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் இரண்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனவென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது.
இடப்பெயர்ந்தவர்களுள் சுமார் 580 பேர் கொஸ்லந்த கணேச மஹா வித்தியாலயத் திலும் 315 பேர் பூனாகல மஹா வித்தியா லயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வானிலை
இடைவெப்ப பருவக்காற்று காலநிலை காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும். இதனால் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யலாமெ னவும் வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியான லக்ஷ்மி லத்தீப் தெரிவித்தார்.
மேலும் இக்காலப் பகுதியில் இடி, மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படுவதனால் பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, எல்ல, பசறை, ஊவா பரணகம, ஹல்துமுல்ல, ஹப்புத்தளை, ஹாலியெல ஆகிய பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசறை, லுனகல, எட்டம்பிட்டிய, வெலிமட, பதுளை – பண்டாரவளை, மஹியங்கணை, ஹாலிஹெல- வெலிமட ஆகிய வீதிகளிலும் மண்சரிவு அபாயமி ருப்பதனால், மக்கள் அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதனால், வலப்பனையூடாக கண்டியிலிருந்து ராகல வரையிலான வீதி, நுவரெலியா – ஹற்றன் வீதி, கண்டியிலிருந்து ரந்தெனிகலவூடான பதுளை வரையிலான வீதி ஆகியவற்றினூடாக பயணத்தை தவிர்ப்பது சிறந்ததெனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் ரத்தொட்டை, உக்குவெல, மாத்தளை, அம்பன்கங்க, யட்டவட்ட, தவுல ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயமிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எச்சரிக்கை கூறப்பட்டுள்ளது.

Related Post