யுத்தத்திற்கு முடிவு கண்டதைப்போல், தமிழ் பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண வழியை ஏற்படுத்தியதுபோல், தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தீர்வைக்காண வேண்டும். தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஈ.பி.டி.பி ஆதரவு.
எமது மக்களின் சார்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையுடன், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஆதரவு வழங்குவதென ஈ.பி.டி.பி. முடிவு செய்துள்ளது.
நேற்றைய தினம் மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளடங்கிய குழுவினர் அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின்போது, இலங்கை மக்கள் அனைவரும் வெறுத்த அழிவு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜனாதிபதியாகிய உங்களினாலேயே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுத் தரமுடியும் என்றும்
யுத்தத்துக்குப் பின்னர் அழிந்த எமது மாகாணம் பல்வேறு அபிவிருத்தி முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அச்சமற்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சமின்றி மூவின மக்களும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் எந்தவேளையிலும் சென்றுவரமுடியுமான சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி கூறுகின்றோம்.
அதேவேளை, எமது மக்களின் முக்கிய கோரிக்கைகளான, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு வலயமாக தடுக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலங்களை தேசிய பாதுகாப்புக்குத் தேவையான பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசத்து நிலத்தை உரியவர்களிடமே வழங்கவேண்டும்.
சிறைகளில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும்.
ஐம்பதாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்துக்கும் மேலதிகமாக சொந்த வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கிடைக்க மேலும் ஒரு இலட்சம் வீடுகளை அமைத்துத் தரவேண்டும்.
வடமாகாண மாவட்டங்களின் குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களின் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட ஆவண செய்யவேண்டும்.
ஓமந்தை சோதனைச் சாவடியில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் நெருக்கடிகளுக்கு இடமில்லாமல் சுதந்திரமாக பயணிக்க ஆவண செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கும் எமது மக்களுக்கும் உண்டு.
ஆகவே அடுத்த தேர்தலிலும் நீங்களே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். கடந்த காலத் தவறுகளை மனதில் திருத்தி எமது மக்கள் தமது ஆதரவையும் உங்களுக்கே வழங்குவார்கள் என்றும் ஈ.பி.டி.பினராகிய நாம் எடுத்துக் கூறியுள்ளோம். (tk)