Breaking
Sun. Jan 12th, 2025

-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

மு.கா என்ற கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் அதுவெற்றி பெறும் என்ற ஒரு காலம் இருந்தது. தற்போது அது முற்றுமுழுதாக மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. முன்னர் போன்றல்லாது மு.காவில் மிக கடுமையான முறையில் வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனை சாதாரணமாக அவதானிக்கும் ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும்.

எதிர் வரும் தேர்தலில் சம்மாந்துறையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரும், நிந்தவூரில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனும் தேர்தல் கேட்கவுள்ளனர். இந்த சிறிய தேர்தலுக்கு மு.கா முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை களமிறக்குவது தோல்விப் பயமின்றி வேறு எதுவுமாக இருக்காது

இன்னும் மிக குறுகிய காலப்பகுதியினுள் மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ளது. அந்த தேர்தலில் இவர்கள் இருவரும் களமிறக்கப்பட வேண்டிய முக்கிய வேட்பாளர்கள். இத்தேர்தலை வென்று கொடுத்துவிட்டு அவர்கள் மாகாண சபை தேர்தலுக்கு சென்று விடுவார்கள். அதாவது இச்சிறிய தேர்தலை வெற்றிகொள்ள இவர்களின் நேரடிப் பங்களிப்பு மு.கா கட்சிக்கு அவசியமாகிறது

பொதுவாக இப்படியான செயற்பாடுகளில் தனிமனித செல்வாக்குடையவர்களே களம் இறங்குவார்கள். இங்கும் அதுதான் நடந்தேறியுள்ளது. இச்செயற்பாட்டை இன்னுமொரு வடிவில் சொல்வதானால் தனிமனித செல்வாக்கு மு.கா கட்சி அரசியல் அடையாளம் பெற அவசியமாகிறது. இங்கு தான் நாம் மிகவும் அவதானம் செலுத்த வேண்டிய ஒரு விடயம் உள்ளது. ஒரு காலத்தில் பல தனிமனிதர்களுக்கு அரசியல் அடையாளம் வழங்கிய மு.காவுக்கு இன்று தனி மனிதர்கள் அரசியல் அடையாளம் வழங்கும் நிலை.

இவர்கள் இருவரும் மு.காவுடன் மிக அண்மையில் வந்து இணைந்தவர்கள். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் கடந்த மாகாண சபை தேர்தல் காலப்பகுதியிலேயே மு.காவுடன் இணைந்தார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியிலேயே மு.காவுடன் இணைந்தார். நேற்று கட்சிக்கு வந்தவர்ககளுடைய செல்வாக்கை பயன்படுத்தி மு.கா தேர்தலைவெற்றிபெற வேண்டுமென்ற இக்கட்டான நிலையில் இருப்பது மு.கா மீது உண்மையான பற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் வெட்கிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

Related Post