வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நிம்மதியான சந்தோசமான வாழ்வுக்காகவும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதீயுதீன், இச்சவால்களை முறியடித்து முன்னேற அனைவரையும் ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் இலவச சாரதி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வில் , பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் அங்கு தெரிவித்தது வருமாறு
வன்னி மாவட்டத்தில் நான் முன்னெடுக்கும் பணிகளை எந்த குறிகிய எண்ணத்துடன் பார்த்தாலும் சரி – எனது பணிகள் இன தம பேதம் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
கடந்த காலங்களில் எமது மாவட்டம் பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளது. 30 வருடங்களாக அழிக்கப்பட்ட இம்மாவட்டம் கடந்த 04 வருடங்களில் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு பாரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது.
மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரையான ரயில் பாதை, புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்திற்கான வீதி , அனுராதபுரம் மன்னார் வீதி என்றும் கட்டுக்குரைக்குளம், அகத்திமுறிப்பு குளம் என்று பாரிய குளங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
மறுபுறம் கல்வியில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது இந்த மாவட்டம். அதிகளவு தொழில் வாய்ப்பு பெற்றுள்ளது இம்மாவட்டம். மின்சாரம் வழங்கல் 85 வீதம் பூர்த்தியடைந்துள்ளது.
இவ்வாறு பாரிய அபிவிருத்திகள் இம்மாவட்டம் அடைவதற்கு காரணம், நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் இந்த அதிகார பலம்தான் அந்த அரசியல் பலம்தான் இந்த அபிவிருத்திகளை இங்கு கொண்டுவந்தது.
எமது அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ளாதவர்களும் உள்ளனர். ஆனால் நாம் அவர்களை தூரப்படுத்தி பார்க்கவில்லை. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தொழில்வாய்ப்புக்களில் அவர்களையும் உள்ளிட்டுள்ளோம். ஆனால் நாங்கள் இவ்வாறு இன மத பேதமின்றி செய்யும் சேவைகளை இன்னும் இன்னும் இனவாத நோக்குடன் பார்க்கின்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
எனவே கடந்த காலங்களில் இந்த மாவட்டம் கண்ட அபிவிருத்தி தொழில் வாய்ப்புக்கள் மக்களின் நிம்மதியான வாழ்வு எதிர்காலத்தில் மேலும் பலம் அடைய வேண்டும் எனின் இனமத பேதங்களை துறந்து எமது பயணத்தில் ஒன்றிணைந்து அரசியல் பலத்தை மேலும் பலப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.