அரசாங்கத்திலிருந்து விலக ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவினால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு வழங்கப்படும் பதிலைப் பொறுத்தே, 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி முன்வைத்த யோசனைகளுக்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்திலேயே வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது ஹெல உறுமய வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டமானது தேர்தல் திட்டமாகும். இது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திக்கான வரவு – செலவுத் திட்டமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.