Breaking
Sat. Jan 11th, 2025
மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான் என்பவர் பஸ் சாரதியாக பணியாற்றி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் நேற்று காலை உதகமண்டலம் நோக்கி மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. பஸ்ஸினை அப்துல் ரஹ்மானே செலுத்தியுள்ளார்.
ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில்,  அப்துல் ரஹ்மானுக்கு திடீரென்று நெஞ்சுவலி, சில வினாடிகளில் அவர் பாதி மயக்க நிலையில், பஸ்ஸினை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பேருந்து இருமுறை அலைபாய தொடங்கியது.
இனியும், பஸ் முன்நோக்கி சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்து கொண்ட அப்துல் ரஹ்மான்,  நீலக்கோட்டை என்ற இடத்தில் வீதியின் தடுப்புச் சுவரின் மீது சக்கரங்களை ஏற்றி பஸ்ஸினை நிறுத்தியதோடு, அவர் மயக்கமடைந்துள்ளார்.
இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ரஹ்மான உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பஸ்ஸினை ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பஸ் மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரணிக்கும் தருவாயிலும் 110 பேரின் உயிரைக் காப்பாற்றிய சாரதியை பற்றி பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Post