திங்கட்கிழமை சிங்கப்பூர் அரசு ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இற்கு எதிரான போரில் தனது பங்களிப்பையும் நல்கப் போவதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய சில நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அரபு தேசங்களும் ISIS மீது வான் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தி வருகின்றன. தரை வழியாக ஈராக்கின் குர்து பேஷ்மெர்கா படையும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது.
இந்நிலையில் மத்திய கிழக்கில் ISIS உடன் போராடி வரும் சர்வதேச கூட்டணி நாடுகளுக்கு ஆலோசகர்கள் அளித்தல் மற்றும் ஆயுதம், உபகரணங்களை நல்குதல் ஆகிய விதங்களில் சிங்கப்பூர் அரசு தனது பங்களிப்பை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து சிங்கப்பூரின் Straits Times பத்திரிகை வெளியிட்ட செய்தியில் பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்ச ந்க் எங் ஹென் அறிவித்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், அல் கொய்தா மற்றும் ஜெம்மாஹ் இஸ்லாமியாஹ் முன்னர் விளைத்திருந்த அச்சுறுத்தல் போன்ற இன்னொன்றைத் தவிர்ப்பதற்கு சிங்கப்பூர் அரசு மத்திய கிழக்கில் ISIS இற்கு எதிரான போரில் தனது பங்களிப்பை வழங்குவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் ஹென் மேலும் தெரிவிக்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான போரானது ஓர் நாட்டின் சமூக, உளவியல் ரீதியான மற்றும் பலத்துக்கு முக்கியம் என்றும் இதற்கு ஏனைய நாடுகளும் கைகோர்க்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார். இதேவேளை முன்னர் உலக நாடுகள் ஒன்றிணைந்து போரில் ஈடுபட்டதன் விளைவே தற்போது அல் கொய்தா மற்றும் ஜெம்மாஹ் இஸ்லாமியா ஆகியவை பலவீனமடைந்து இருப்பதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்ட ஹென் இது போன்றே இன்று வளர்ச்சியடைந்து வரும் ISIS அது தடுமாறும் விதத்தில் ஒடுக்கப் பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.