-ஊடகப்பிரிவு-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சியும் அதன் எதிர்கால வெற்றியும் வடக்கில் மாத்திரமின்றி கிழக்கின் எல்லாப் பிரதேசங்களிலும் உறுதியாகி விட்டன. அந்த வெற்றியின் பங்காளர்களாக கல்முனை மக்களும் மாறிக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்புக்களுக்கான கூட்டங்கள் கல்முனை, மாவடிப்பள்ளி, இறக்காமம், மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்றன.
இறுதியாக கல்முனை மகளிர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கொண்;டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்முனை மாநகரம் பெரும் அரசியல் தலைவர்கள் வாழ்ந்ததொரு பழமைவாய்ந்த ஊராகும். இன்று அதனை மாநகரம் என்று கூறுவதற்கு எந்தவித அடையாளங்களும் காணப்படவில்லை.
பாழடைந்த பழைய கட்டடங்களும், குன்றும் குழியுமாகவுள்ள பஸ்நிலையமும், பெட்டிக்கடைகளும், குப்பைக் கழிவுகளும், வீதி விளக்குகள் அற்ற பாதைகள் என பெரும் அசிங்கமாகக் காட்சியளிப்பது பற்றி கல்முனைக்கு சென்று வருபவர்கள் எவரும் கவலைப்பட்டு பேசாமல் இருப்பதில்லை. குறிப்பாக பெண்களும், இளைஞர்களும் புதிய மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். மாற்றங்களின் ஊடாகவே பிரதேச சமூகமும், மக்களும் சமூகமும் விமோசனமடையும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக பழைய பல்லவியாக இல்லாமல் எதிர்வரும் மாநகர சபைக்காகப் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து அந்த மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை ஒருமுறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் வழங்கிப்பாருங்கள். நிச்சயமாக குறுகிய ஒருகாலப் பகுதியினுள் பாரிய மாற்றங்களை உணர்வீர்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை மிகவும் பக்குவமான அரசியல் கலாசாரத்தை நடத்திக்கொண்டு வருகின்றது. அதனாலேயே இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து பிரதேசங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும் விருட்சமாக மாறிக்கொண்டு வருகின்றது.