Breaking
Wed. Jan 15th, 2025

-ஊடகபிரிவு-

முஸ்லிம் மக்களின் விடுதலைப்போராட்டம் சர்வாதிகாரப் போக்கு கொண்ட முஸ்லிம் தேசத்திற்கு எதிரான முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எனப்படும் ரவூப் ஹக்கீமிடம் சிக்கி மலினப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தலைமையை துடைத்தெறிந்து கட்சியை நாம் மீட்டெடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமுமான எம். ரி. ஹசனலி கூறினார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் முஸ்தபாபுரம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.ஏ.வாஹிட்டின் தேர்தல் பணிமனைத் திறப்பு விழாவும் பிரசார கருத்தரங்கும் கடந்த சனிக்கிழமை (20) நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வேட்பாளர் ஏ.பி.ஏ. வாஹிட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் அமைப்பாளர் டாக்டர் ஏ.எல். பரீத், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், முதன்மை வேட்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் உட்பட வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசனலி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

என்னைப் பொறுத்தவரை இன்றும் நான் முஸ்லிம் காங்கிரஸ்காரன் தான். ஆனால் மறைந்த மாமனிதர் மர்ஹூ ம் அஸ்ரஃபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அவர் காட்டிய தூய வழியிலிருந்து விலகி கொள்கைகளைப் புறந்தள்ளி உட்கட்சி ஜனநாயகம் கிஞ்சித்துமற்ற கட்சியாகத் திகழ்கிறது.

தலைமைத்துவப் பண்பற்ற பொய், சூது, வஞ்சனை, மோசடி, பேரம்பேசும், சமூகத்தை விற்றுப்பிழைக்கும் தலைமையிடம் இக்கட்சி சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றது.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இன்று மலினப்படுத்திக்கொண்டிருக்கிறது. மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் எழுச்சிப்பாடல்களை மேடைக்கு மேடை ஒலிபரப்பியும், அவரது படத்தை வைத்தும் மக்களை ஏமாற்றும் உபாயத்தை தற்போது முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது.

ஆனால், தலைவர் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யாப்போ, கொள்கைகளோ, இல்லாத வெறும் வெற்று கோதாகவே உள்ளதென்பதை இன்று மக்கள் புரிந்து கொள்ளாமலில்லை.
ஆனாலும், தற்போதைய போலித் தலைமைத்துவத்தை காப்பாற்றுவதிலும் சுய நலம், சுயலாபம் கொண்ட நம்மில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகையவர்களும் சமூகத்தை விற்றுப்பிழைக்கும், சர்வதிகாரப்போக்குடன் செயற்படும் இத்தலைமையின் உண்மை சொரூபத்தை உணரும் காலம் வெகுதூரத்திலில்லை.
நாம் முஸ்லிம் தேசியத்தை வென்றெடுக்கவேண்டும். கிழக்கில் இழந்துள்ள 62 ஆயிரம் ஏக்கர் காணிகளை மீட்டெடுக்கவேண்டும். ஹக்கீம் சொந்தம் கொண்டாடும் நம் கட்சியை மீட்டெடுக்க வேண்டும்.

கடந்த சில வருடகாலமாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்குச் செல்லாது மௌனம் காத்துவந்த நான், என்னை அப்பிரதேச மக்களுடன் தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் தோலை அங்கு பகிரங்கமேடையில் உரித்துவிட்டே வந்துள்ளேன்.
அட்டாளைச்சேனைக்கு உரித்தான முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான் கேட்டு வற்புறுத்தியதாக உண்மைக்குப் புறம்பாகக்கூறி என்னை அம்மக்களைப் பகைக்க வைத்தனர்.  அட்டளைச்சேனை மக்களுக்கு பகிரங்க மேடையில் உண்மையை விளக்கி, தேசியப்பட்டியல் நியமனத்தை நான் ஒரு போதும் கோரவில்லையென்பதை சத்தியம் செய்துவந்துள்ளேன்.

இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழித்து தடயமே இல்லாமலாக்குவதற்கே யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இனவாத சக்திகளின் திட்டமிட்ட சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் காங்கிரஸை இதன் மூலம் தலைமைத்துவம் பலிக்கடாவாக்கியுள்ளது. இத்தகைய உண்மை நிலைமைகளை மக்கள் உணர்ந்துள்ளதால் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பக்கம் மக்கள் அணிதிரண்ட வண்ணமுள்ளனர்.

இந்த மக்கள் எழுச்சி இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போலித் தலைமைகளுக்கும், முஸ்லிம் சமூகத்தை விற்றுப்பிழைத்து வருவோருக்கும் தக்க பாடத்தைப் புகட்டுமென்பது திண்ணமாகும் என்றார்.

Related Post