-முர்ஷிட் கல்குடா-
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி, நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்ச௫மான அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நெல் கொள்வனவு செய்யும் நிகழ்வை வவுணதீவில் (29) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2017, 2018ம் ஆண்டுக்கான பெரும்போக நெல் அறுவடையை முன்னிட்டு அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யப்படும் நிகழ்வு நாடு பூராகவும் இன்று இடம்பெற்று வருகின்றது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேசத்தில் நெல் கொள்வனவு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் இடங்களில் இருந்து அரசாங்கம் நியாயமான விலை கொடுத்து வாங்கி வருகின்றது.
நாடு நெல் 38 ரூபாய் வீதமும், சம்பா நெல் 41 ரூபா வீதமும் விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் நெல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்ட விலையில் வாங்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வவுணதீவு, மணல்பிட்டி, தும்பங்கேணி, கரடியனாறு, புலிபாய்ந்தகல், கஜுவத்தை பிரதேசத்தில் இருக்கின்ற நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை நல்ல விலையில் விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.