Breaking
Sun. Jan 12th, 2025

கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா.

‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்)

ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே?

2012 டிசம்பர் 12 அன்று வட கொரியா ஒரு புதிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தால் உங்கள் இஷ்டம். ‘க்வாங்ம்யாங்சாங்-3-யூனிட்-2’ – இதுதான் அதன் பெயர் (இனி பிடிவாதம் பிடிப்பீர்களா?)

அவ்வளவுதான், பல நாடுகள் இதைக் கண்டித்தன. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் இந்தச் செயற்கைக்கோளை ‘போருக்கான ஒத்திகை’ என்று வர்ணித்தன. இந்த நாடுகள் எப்போதுமே வட கொரியாவின் எதிரணியில் இருந்தவைதான்.

ஆனால் சீனா கூட இதைக் கண்டித்தது. இத்தனைக்கும் ‘வட கொரியா ஆக்கிரமிக்கப்பட்டால் சீனா தனது ராணுவத்தை அனுப்பி அதைப் பாதுகாக்கும்’ எனும் இருதரப்பு ஒப்பந்தம் அந்த நாடுகளுக்கிடையே இருந்தது.

போதாக்குறைக்கு ஐ.நா.வும் கண்டிக்க, வட கொரியா உறுமியது. ‘ஆமாம், செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஆர்வம் காட்டுவது வேறொரு காரணத்துக்காகத்தான்’ என்றது. அதோடு நிற்கவில்லை. அந்த ‘வேறொரு காரணம்’ எது என்பதையும் வெளிப்படுத்தியது. தங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தொழில் நுட்பத்தை பரிசோதிப்பதுதான் உண்மையான காரணம்.

அமெரிக்கா – இந்தப் பெயரைக் கேட்டாலே வட கொரியாவின் மக்கள் வைது தீர்க்கிறார்கள். என்ன காரணம்? அது ரொம்பவுமே அழுத்தமான காரணம்.

ஒரு காலத்தில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது கொரியா. பிறகு 35 வருடங்கள் ஜப்பானின் அதிகாரத்தில் அடங்கிக் கிடந்தது கொரியா. ஒன்றை கவனித்தீர்களா? கொரியா, கொரியா என்று மட்டும்தான் குறிப்பிட்டோம். ஆம். அப்போது கொரியா ஒரே நாடுதான். வடக்கு, தெற்கு என்று பிரிவினை கிடையாது.

முடிந்தது இரண்டாம் உலகப் போர். ஜப்பான் கொரியாவின் மீதான அதிகாரத்தை நீக்கிக் கொண்டது. சுதந்திரக் காற்றை கொரியா முழுமையாக அனுபவிப்பதற்குள் ‘இதோ நாங்கள் வந்துவிட்டோம் கவலை வேண்டாம்’ என்றபடி கொரியாவின் வடபகுதியில் நுழைந்தது சோவியத் யூனியன்.

சோவியத்தின் பரம்பரைப் பகைவன் சும்மா இருந்து விடுவானா? அமெரிக்காவும் தன் ராணுவத்தைக் கொரியாவுக்கு அனுப்பியது. இவர்கள் நுழைந்தது தென் பகுதியில். வட கொரியாவில் உலகப் போரினால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய இந்த இரண்டு வல்லரசுகளும் உதவியது உண்மைதான். ஆனால் இந்த உதவிகளைத் தொடர்ந்து அவர்கள் காட்டிய தொடர் அத்துமீறல் கொரியாவின் தலைவிதியை மாற்றி எழுதின.

அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இந்த இரு துருவங்களின் கையில் சிக்கிய கொரியா சீக்கிரமே இரண்டாக துண்டாடப்படுமென்று பல அரசியல் விமர்சகர்கள் அப்போதே கருத்து தெரிவித்தார்கள். அதுதான் நடந்தது. தான் ஆக்ரமித்துக் கொண்ட வடக்குப் பகுதியை கம்யூனிஸப் பாதையில் அழைத்துச் சென்றது சோவியத் யூனியன். அமெரிக்காவோ வருங்கால சுயநல நோக்கத்தையும் மனதில் கொண்டு தென் கொரியாவை ஜனநாயகப் பாதையில் இட்டுச் சென்றது.

பூனைகள்-குரங்கு-அப்பம் கதைதான் நடந்தது. ஆனால் ஒரு வித்தியாசம். பூனைக்குக் கிடைத்த அப்பத்தைத் தாங்கள் பிடுங்கிக் கொண்டு தங்களுக்குள் பிரித்துக் கொண்டன இரண்டு குரங்குகள். கொரியாவின் வடக்குப்பகுதித் தலைவர்கள் நாடு முழுவதும் கம்யூனிஸம் பரவ வேண்டுமென்று நினைத்தார்கள். சோவியத் யூனியனில் இருப்பது போன்ற கம்யூனிஸம்.

அமெரிக்காவின் ஆதரவில் செயல்பட்ட கொரியாவின் தெற்குப் பகுதி மக்கள், கம்யூனிஸ ஆட்சிக்கு இடவலமாகத் தலையசைத்தார்கள். 38-வது இணைக்கோடு (அட்சரேகை என்றும் கூறலாம்) – இதுதான் அமெரிக்க, சோவியத் ஆக்ரமிப்பு பகுதிகளைப் பிரித்த எல்லைக்கோடு. ராமாயணம் போலவே இதிலும் கோடு தாண்டும் படலம் நடந்தது. அதுவும் அடிக்கடி. தொடர்ந்தது யுத்தம்.

முக்கியமாக கொரியாவின் வடக்குப் பகுதி ராணுவம் தெற்குப் பகுதியில் நுழைந்தது. தொடங்கியது ‘கொரியப் போர்’. கொரியப் போர் உலகின் மிக மோசமான போர்களில் ஒன்று. மேலோட்டமாகப் பார்த்தால் அது கொரியா என்ற நாட்டின் இரண்டு பகுதி மக்களுக்கிடையே நடைபெற்ற உள்நாட்டுப் போர், அவ்வளவே. ஆனால் நிஜத்தில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் தங்கள் பலத்தைக் காட்டிக் கொள்வதற்கான களமாகவே இந்த யுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டன. பிறகென்ன அழிவு பலமாகவே இருந்தது.

Related Post