-ஊடகப்பிரிவு-
இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிய பங்களிப்பினை ஒரு போதும் ஜக்கிய தேசிய கட்சி மறந்துவிடாது என தெரிவித்துள்ள கம்பஹா மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவின்த ஜயவர்தன, மறைந்த எனது தந்தை அமைச்சர் ஜயலத் ஜயவர்தன அவர்கள் மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவர எண்ணிய கனவினை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து நனவாக்குவதற்காக செயற்படப்போகின்றேன் என்றும் கூறினார்.
மன்னார் மாவட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமை வருகைத்தந்த பாராளுமன்ற உறுப்பினர், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு மடு, சின்னபண்டிவிரிச்சான் வட்டார வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அங்கு உரையாற்றுகையில் –
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றமொன்றின் அவசியம் உணரப்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்திற்கான சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதொரு காலகட்டத்தில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது இவரின் வெற்றிக்கு உதவி செய்வதாக கூறிய பலர் இறுதி தருவாயில் கைகளை விரித்துவிட்டனர். அன்றைய சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசிலும் பலம் பொருந்திய அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை கொண்டுவர வழங்கிய பங்களிப்பு என்பது வேறு எவராலும் வழங்கப்படவில்லை.
இவ்வாறானதொரு அரசியல் துார நோக்குடைய, மக்கள் தலைவனை வன்னி மக்கள் பெற்றுள்ளதை பாராட்டுகின்றேன்.
எனது தந்தையுடன் ஒன்றாக அரசியல் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் எனக்கும் அரசியல் ரீதியான ஒரு தலைவராக மாறியுள்ளார். அவர் இந்த மாவட்ட மக்களுக்கு செய்கின்ற பணிகளின் பங்காளராக என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அவரிடமும்,உங்களிடமும் கேட்க விரும்புகின்றேன்.
இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு இங்கு வந்து மேடைப்போட்டு பேசும் அரசியல்வாதிகள், கொழும்பில் வந்து இந்த மக்களை பற்றி பேசுவதில்லை. இவர்களிடம் கடந்த நகர பிரதேச சபைகளின் ஆட்சிகளை கொடுத்தீர்கள் நீங்கள். ஆனால் ,அவர்களால் மின் விளக்குகளைக் கூட பொறுத்த முடியாத நிலையே காணப்பட்டது. மீண்டும் இவ்வாறானவர்களிடத்தில் மேலும் 5 வருட காலத்தை கொடுப்பீர்களாயின் எதை பெற்றுக் கொள்ளமுடியும்? எனக் கேட்கின்றேன்.
யுத்த அழிவுகளால் அனைத்தையும் இழந்த சமூகமாக வடபுலத்து தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கின்றீர்கள். உங்களது வாழ்வாதார தேவைகள், அடிப்படைத் தேவைகள் என்பனவற்றை பெற்றுக்கொள்ள ஆளுகின்ற அரசாங்கத்தின் உதவி இன்றியமையாதது. இதனை பெருவதற்கு ஒரேவழி தான் வடக்குக்கு அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருக்கின்ற ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவதாகும்.
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்தையும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கு அமைய எவ்வித தடைகளுமின்றி பிரதமர் பெற்றுக்கொடுத்து வருகின்றார்.
குறிப்பாக எமது இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் விடயங்களில் கரிசனையுடன் செயற்படுகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறியும் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன்மூலம் அதற்கான அலுவலகத்தை அமைக்கவுள்ளது. இது இந்த மக்களது நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
வடக்கு ,கிழக்கு மக்களினால் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாம் பார்க்கின்றோம். அவரது வேகமும், மக்கள் மீது கொண்டுள்ள பற்றும் இதனை வெளிப்படுத்துகின்றது. ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போன்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் எனது அரசியல் தலைவராக ஏற்று மக்கள் சேவையில் இணைவதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக அவர் கூறினார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா மற்றும் அமைச்சரின் வங்காலை இணைப்பாளர் ராஜன், மார்க்,செல்லத்தம்பு சந்தியாகோ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.