Breaking
Fri. Nov 15th, 2024

 -ஊடகப்பிரிவு-

அரசியலுடனும், ஆயுதக் குழுக்களுடனும் போராடி வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இன்று சுயநலம் கொண்ட ஒரு தனி மனிதனிடம் சிக்கித் தவிக்கிறது. அதனை மீட்டெடுப்பதே எமது பணியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம். ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிந்தவூர் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அண்மையில் (03) நிந்தவூர் புதுநகர் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஐந்தில் ஆறு பெரும்பான்மையுள்ள ஐக்கிய தேசியக் கட்சியுடனும், 17 ஆயுதக் குழுக்களுடனும் போராடி, எத்தனையோ தடவைகள் துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தப்பி, பெருந்தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்க எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இதில் எதிலுமே எந்த விதத்திலும் பங்கெடுக்காத ஒரு தனி மனிதனின் அணுக்குப்பிடிக்குள் சிக்குண்டு சீரழிகிறது.

இதனை மீட்டெடுத்து, மறைந்த மாமனிதன் அஸ்ரபின் காலத்து யாப்புடனும், கொள்கைகளுடனும் மீண்டும் பயணிக்கவே நாம் இன்று இப்போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். இதற்காக பலர் எங்களுடன் கைகோர்த்து இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முஸ்லிம்  காங்கிரஸிலிருந்து எம்மை யாரும் விலக்கவில்லை. அவ்வாறு விலக்குவதற்கு எவருக்கும் தைரியமில்லை. மு.கா என்னுடை கட்சி, இந்த மண்ணுக்கும், நமக்குமுள்ள தொடர்பு எவ்வாறானதோ? அவ்வாறானதே நமக்கும் மு.காங்கிரசுக்குமுள்ள தொடர்பாகும்.
இந்தக் கட்சியை மீட்டெடுத்து, ஊழல்களை விரட்டியடித்து, இதனைத் தூய்மைப்படுத்தி, மறைந்த மாமனிதன் அஸ்ரப் காலத்து யாப்புடனும், கொள்கைகளுடனும் பயணிக்கவும், இந்தக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக முஸ்லிம் காங்கிரசை மாற்றியமைப்பதே எமது தேவையாக இருக்கிறது. இப்போராட்டத்திற்கு சந்தர்ப்பம் வழங்கும் தேர்தலாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.

எனவே இத் தேர்தல் என்பது, எமது மண்ணை மீட்கின்ற தேர்தலாகவும், நயவஞ்சகத் தனமான தலைமையை விரட்டியடிக்கின்ற தேர்தலாகவும் கருதி, நீங்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என நான் உங்களிடம் கேட்கின்றேன் என்றார்.

Related Post