Breaking
Mon. Nov 25th, 2024

-ஊடகப்பிரிவு-

நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது. அக்கட்சியின் தலைமை சமூகம் சார்ந்த போராட்டங்களையும், பணிகளையும் எந்தவித தடைகளுமின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேசத்திற்கான மகளிர் அணி காரியாலயத் திறப்பு விழாவும், கட்சியின் வெற்றிக்கு பாங்காற்றிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் நிந்தவூரில் இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச மகளிர் அணி அமைப்பாளர் எம்.ஐ.எஸ்.பஸ்பியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், மக்கள் காங்கிரஸில் நிந்தவூர் பிரதேச சபைக்காகப் போட்டியிட்ட வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

 

டாக்டர். ஹஸ்மியா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மக்கள் காங்கிரஸ் ஆட்சி, அதிகாரத்தில் நம்பிக்கை வைத்து என்றும் பணியாற்றுவதில்லை. எந்த ஆட்சி, அதிகாரம் வந்தாலும் மக்கள் சக்தியே எமது பலமாகும். இந்த மக்கள் சக்தியினூடாகவே எமது சமூகத்தின் குரலாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணியாற்றி வருகின்றார்.

மர்ஹூம் அஸ்ரபுக்குப் பிறகு அன்னாரின் கொள்கையிலும், அவர் காட்டிய வழியிலும் சென்று கொண்டிருக்கும் ஒரு தலைமை என்றால் அது மக்கள் காங்கிரஸின் தலைமையே ஆகும்.

அனைத்து முஸ்லிம் கட்சிகளும் மக்களின் ஆணையைப் பெற்று தத்தமது சுகபோகங்களுக்காகவே அதனை அனுபவித்து வருகின்றனர். அதனாலேயே மர்ஹூம் அஸ்ரபின் வழியில் பயணிக்கும் மக்கள் காங்கிரஸ் கட்சியினதும், அதன் தலைமை மீதும் நம்பிக்கை வைத்துக்கொண்டு மக்கள் அணிதிரள்கின்றனர்.

மக்கள் பலத்துடன் உத்வேகத்துடன் சென்று கொண்டிருக்கும் எமது கட்சிக்கு, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் என்றுமில்லாதவாறு கிழக்கு மாகாண மக்கள், பலம் சேர்த்து நிரூபித்துக் காட்டியிருப்பது கட்சிக்கும், தலைமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே அமைவதுடன், ஏனைய முஸ்லிம் கட்சிகள் இனிமேல் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகவுமே உள்ளது.

தேர்தல் வெற்றியுடன் கொழும்புக்குச் சென்று மற்றுமொரு தெர்தல் ஒன்றுக்காகவே மக்களை சந்திக்கும் அரசியல் கலாசாரத்தை விடுபடச் செய்யும் நோக்கிலும், மக்கள் குறைகள், தேவைகள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் மக்கள் காங்கிரஸ் ஒவ்வொரு பிரதேசமாகச் சென்று மக்கள் சந்திப்புக்களை செய்து வருகின்றது.

சேவைகள் அல்லது உதவிகள் என்ற போர்வையில் மக்களுக்குச் சிறு கொடுப்பனவுகளையோ அல்லது பொருட்களையோ வழங்குவதன் மூலம், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. விதவைகள், வருமானம் குன்றிய அங்கத்தவர் கூடிய குடும்பங்கள், விஷேட தேவையுடைய குடும்பங்கள் என சமூகத்தில் பல குடும்பங்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான நீடித்து நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்திகளையும், நிலையான வருமானமீட்டக் கூடிய தொழில் முயற்சிகளுக்கான உதவிகளையும் மேற்கொள்வதற்கு, எமது தலைமை தீவிரமாக செயற்பட்டுகொண்டு வருகின்றது. அந்தவகையில் அதற்கான முதற்கட்ட பணிகளையும் எமது மகளிர் பிரிவு பிரதேசங்கள் தோறும் மேற்கொண்டு வருகின்றது.

வறுமையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்கள் பெண்களாகவே உள்ளனர். அதற்கான சவாலை தைரியமாக முகம்கொடுத்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் என்பவர்கள் முடியாதவர்கள் என்ற கோட்பாட்டை தளர்தி எறிய வேண்டும். இலங்கையில் ஆரம்ப காலத்தில் பெண்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தன. இத்தறுனத்தில் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்க வேண்டும் என ஒரு பெண் தன்னந்தனியாக முன்நின்று போராட்டம் நடத்தியதன் காரணத்தினாலேயே, இன்று பெண்களும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளோம் என்பதனை நாம் அனைவரும் பெருமிதம்கொள்ள வேண்டும் என்றார்.

 

 

Related Post