Breaking
Mon. Nov 25th, 2024

-ஊடகப்பிரிவு-

கூட்டுறவுத் துறை சார்ந்த அமைப்புக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவ்வமைப்புக்கள் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள், முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 03 மாதத்துக்குள் அந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு துறை சார்ந்த 14 பிரதான அமைப்புகளுக்கும், அமைச்சருக்கும் இடையே கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

கூட்டுறவு துறை சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்லாது, எதிர்வரும் காலங்களில் முன்னேற்றத்துக்காக முன்வைத்துள்ள முன்மொழிவுகள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். ஒருசில பிரச்சினைகளை எமது ஆலோசனையாளரின் ஊடாக தீர்த்து வைக்க முடியும். வேறுசில பிரச்சினைகளை அமைச்சின் ஊடாகத் தீர்த்து வைக்க முடியும். அதேபோல் மேலும், சில பிரச்சினைகளை அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளுடன் தொடர்புகொண்டு தீர்த்து வைக்க முடியும். அதேபோன்று, எமது ஆணையாளர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றார். அவரைச் சந்தித்தும் நீங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

இந்த அமைப்புக்களிலுள்ள சேவையாளர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் உள்ளிட்ட கூட்டுறவுத்துறையிலுள்ள ஏனைய அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து, கூட்டுறவுத் துறையை நாட்டு மக்களுடன், குறிப்பாக கிராமபுரத்தில் வாழும் மக்களுக்கு அண்மிக்கக்கூடியவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

அத்துடன், உங்களது உற்பத்திகளை உள்நாடு, வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேபோன்று கூட்டுறவுத்துறை பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியவாறு தகவல் மையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றையும் அதேபோன்று ஆவணப்பதிவகம் ஒன்றையும் அமைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் 03 மாதத்திற்கு ஒருமுறை உங்களைச் சந்தித்து எதிர்கால திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் எண்ணியுள்ளோம் என்றார்.

 

 

 

Related Post