Breaking
Mon. Nov 25th, 2024

-ஊடகப்பிரிவு-

கண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக் கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பிரதியமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

பிரதியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு இவ்வாறான நிலைமைகள் மேலும் தொடராத வண்ணம் பாதுகாப்பு தரப்பினர் நீதியான முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

வன்முறை சூழலின் பின்னணியில் திகன மற்றும் தெல்தெனியவில் பள்ளிவாசல்கள் சேதமுற்றிருப்பதுடன், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பல தீக்கிரையாகியுள்ளன. அத்தோடு மரண ஊர்வலத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களால் கணிசமான எண்ணிக்கையான வீடுகளுக்கு கல்வீச்சு இடம்பெற்றுள்ளதுடன், பல இடங்களில் வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

முஸ்லிம் பகுதிகளில் போதிய அளவு சேதங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில இடங்களுக்கு வன்முறையை இடம்பெறாத வகையில் உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும். அதனை விடுத்து மக்களுக்கு கண்ணீர் புகை மூலம் தாக்குதல் நடாத்துவது நல்லாட்சிக்கு உகந்ததல்ல.

எனவே அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான எதிரான போராட்டம் தற்போது கண்டி பகுதிக்கு மாறியுள்ளது. இந்த பிரச்சனை மீண்டும் நாட்டில் இடம்பெறாத வண்ணம் நல்லாட்சி அரசாங்கம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வழிசமைக்க வேண்டுவதுடன், இந்த நாட்டில் வாழும் அனைவரும் சகோதரத்துடன் வாழும் சூழலையும் உருவாக்க வேண்டும்.

அத்துடன் முஸ்லிம் உறவுகள் எமது நாட்டில் அமைதி ஏற்பட்டு அனைத்து இன மக்களும் சகோதரத்துடன் வாழ்வதற்கு இறைவனிடத்தில் பிரார்த்திக்குமாறும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post