-முர்ஷிட் கல்குடா-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலியின் வழிகாட்டலில், கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எச்.எம்.ஜனாப் கலீல், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராசா, செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பன்னிரண்டு கிராமங்களை சேர்ந்த சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம், இடியப்பம் அவிக்கும் உபகரணம், மண் வெட்டி, எண்ணெய் தெளிக்கும் கருவி, தண்ணீர் பம், கோழிக்குஞ்சு உட்பட்ட பல உபகரணங்கள் 249 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலங்கள் தோறும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.