-ஊடகப்பிரிவு-
தேர்தலகால கசப்புணர்வுகளை மறந்து நமது பிரதேசமான நிந்தவூர் மண்ணுக்கும், மக்களுக்கும் ஒன்றுபட்டு பணிசெய்வதற்கு சகல உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.எம்.தாஹிர் அறைகூவல் விடுத்தார்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினர்களிடையே சபையின் தலைவர், உபதலைவர் தெரிவுக்கான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை சபா மண்டபத்தில் அமர்வு இடம்பெற்றது.
இதனையடுத்து சபை தலைவர், உபதலைவர் தெரிவின் போது புதிய தலைவராக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.எம்.தாஹிர் தலைவராகவும், உபதலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வை.எல்.சுலைமான் லெப்பையும் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய தவிசாளர் தாஹிர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நம்மை தெரிவு செய்த மக்கள் மூலம், இத்தகைய மக்கள் பணி செய்யும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் நமக்கு வாக்களித்த மக்களுக்கான சேவைகளை நாம் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பது மட்டுமே முக்கியமானதல்ல, மக்களுக்குச் சேவையாற்றுவதையே பிரதான நோக்கமாகக்கொள்ள வேண்டும்.
இந்த வகையில் நாமனைவரும் கட்சிபேதங்கள், தேர்தல் கால மனக்கசப்புகளை மறந்து நமது நிந்தவூர் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பணிசெய்ய முன்வரவேண்டும். இதற்காக எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன். மனக்கசப்புகளை மறந்து நம் பிரதேசம், நம் மக்களுக்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும்.
ஒரு கட்சியை சார்ந்தவன் என்ற அடிப்படையில் எமக்கு ஆக்கமும் ஊக்கமுமளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி.ஹசனலி மற்றும் கூட்டாக ஆட்சியமைக்க உதவிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள், புத்திஜீவிகள் ஆகியோருக்கும் இச்சந்தப்பத்தில் எனது பெரு நன்றியைத் தெரிவிக்கின்றேன் என்றார்.