பிட்ஸ்பர்கிலிருந்து போஸ்டனுக்கு சென்ற விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெட் புளூ விமானத்தில் பயணித்த குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, விமானம் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் அக்குழந்தை விரைவாக மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.
மசாசூசெட்ஸ் காவல் துறையினர் குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதற்காக போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்து ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல உதவி செய்தனர். போஸ்டன் பகுதியின் நீதாம் புறநகரை சேர்ந்த அக்குழந்தையின் உடல்நிலை குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், குழந்தையின் உடல்நிலை கருதி விமானம் தரையிறங்க முன்னுரிமை தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.