நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (08) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. மேலும் வடமேற்கு கடலோரப்பகுதிகள் அதிகளவில் கொந்தளிப்புடன் காணப்படலாம் எனவும் வடக்கு கடலோரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 10-30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் இக்காற்றின் வேகம் சுமார் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மாத்தறையிலிருந்து கொழும்பு, முல்லைத்தீவு, மன்னார், சிலாபம், திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மணிக்கு 50-60 கி.மீ அளவில் காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் மழை பெய்வதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.