-பரீட் இஸ்பான்-
முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில், நீண்ட காலமாக செப்பனிடப்படாத நிலையில் காணப்பட்ட உள்ளக வீதிகளை, சுமார் 40 கி.மீ வரை கிரவலிட்டு செப்பனிட மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயாநந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர், பாதைகளை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகள், சபையின் கீழ் உள்ள இயந்திரங்களின் ஊடாக துரிதகதியில் ஆரம்பிக்கப்படுமென்று தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, போக்குவரத்து ரீதியாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக உடனடியாக இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், இன்னும் பல அபிவிருத்திகளை மாந்தை கிழக்குப் பிரதேச சபையினூடாக முன்னெடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றும் தவிசாளர் மகாலிங்கம் தயாநந்தன் தெரிவித்தார்.
இதேவேளை, செல்வபுரம், கொல்லவிலாங்குளம் ஆகிய கிராமங்களில் தலா 05 இலட்சம் ரூபா செலவில் பஸ் தரிப்பு நிலையங்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த தவிசாளர், குறித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.