-எ.எம் றிசாத்-
மன்னார் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு, கன்னி அமர்வாக நேற்று (10) இடம்பெற்றது.
பேசாலையில் அமைந்துள்ள மன்னார் பிரதேச சபையின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த அமர்வுக்கு, பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.முஜாஹிர் தலைமை தாங்கினார். சபையின் செயலாளர் உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர்.
இதன் போது, தம்மை அறிமுகம் செய்து கொண்ட உறுப்பினர்கள், தமது கன்னி உரையினை ஆற்றினர். அத்துடன் பிரதேச சபையின் கடந்த அமர்வின் அறிக்கை வாசித்து, திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேவேளை இவ்வருடத்திற்கான வரவு செலவு நிதிக்கூற்று அறிக்கையினை செயலாளர் சமர்ப்பித்து, சில திருத்தங்களுடன் அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதனிடையே சபையின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலும் செயலாளர் திருமதி டீ.எம்.பீ.லோகு விரிவாக எடுத்துக்கூறி தெளிவுபடுத்தினார்.
அலுவலகத்தில் வைக்கப்படும் பிரமுகர்களின் புகைப்படங்கள் தொடர்பில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்கள் தொடர்பில், செயலாளர் முடிவு எடுப்பார் என தீர்மானிக்கப்பட்டது.
மன்னார் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட, தலைமன்னார் தொடக்கம் உயிலங்குளம் வரையிலான மக்கள் குடியிருப்புக்களில் நிலவும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, மன்னார் பிரதேச சபைக்கான வருமானங்களை அதிகரிப்பது, அதற்கு தேவையான பணியாளர்களை உள்வாங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தில் உள்ள வீதிகளை நிர்மாணித்தல், புனரமைத்தல், கழிவகற்றல், வீதி விளக்குகள், கிராமங்களை அழகுபடுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்த அமர்வில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில், துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மக்கள் நலன் சார் விடயங்களில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் தவிசாளர் முஜாஹிர் தெரிவித்தார். .