அமெரிக்க குண்டு வீச்சில் ஐ.எஸ். தலைவர் பக்தாதி காயம் அடைந்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ உருவாக்கியுள்ளனர். அவர்களை அழிக்க அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஈராக்கில் மேற்கு இன்பர் மாகாணத்தில் குயாயிம் நகரில் ஐ.எஸ். தலைவர் அபுபகர் அல்–பக்தாதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டம் நடந்தது. அப்போது அவர்கள் கூடியிருந்த கட்டிடத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசின.
அதில் ஐ.எஸ். தலைவர் அபுபகர் அல்–பக்தாதி காயம் அடைந்தார். அவர் உடலில் எங்கெங்கு காயங்கள் ஏற்பட்டன என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.
இந்த தகவலை ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இதை ஈராக் அரசு தொலைகாட்சியும் உறுதி செய்தது.
ஐ.எஸ். அமைப்பு 2010ஆம் ஆண்டு உருவானதும் அல்கொய்தாவில் இருந்து இதை பிரித்து புதிய இராணுவமாக பக்தாதி உருவாக்கினார்.
இவரது தலைக்கு அமெரிக்கா ரூ.60 கோடி பரிசு அறிவித்துள்ளது. இவர் அல்கொய்தா தலைவர் இஸ்மான்அல், ஜீவாகிரியை விட சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுத்து வருகிறார். எனவே அவரது தலைக்கு மிக கூடுதல் தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளதாக தெரிகிறது.