Breaking
Wed. Nov 20th, 2024

-ஊடகப்பிரிவு-

புத்தளம், கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், கல்லூரியின்  90வது ஆண்டு விழா அண்மையில் (15) மதுரங்குளி ட்ரீம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டிப் பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

அரசியலுக்காக பாடசாலையை பயன்படுத்தாதீர்கள், நானும் இப்பாடசாலையில் கல்விக்கற்றவனே. அந்த வகையில், இப்பாடசாலையின் பல வைபவங்களை முன்னின்று நடாத்தியிருக்கின்றேன். இதன் போது நான் தவறிழைத்திருந்தால் மன்னிப்புக்கேட்டு, அரசியலை மறந்து கற்றப்பாடசாலை என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன். இந்தப்பாடசாலை இன்று கல்வித்தரத்தில் சிறந்த பாடசாலையாக புத்தளமாவட்டத்தில் காணப்படுகின்றது. எனவே அதிகாரத்தின் மூலம் நிர்வாக நடவடிக்கைகளை குழப்பியடிக்க முயற்சிக்காதீர்கள். இந்த செயற்பாட்டை ஒருபோதும் நான் செய்யப்போவதில்லை. அவ்வாறு செயற்படுவதை பார்த்துக்கொண்டிருப்பதும்  இல்லை. அரசியல் அதிகாரத்தை பிராந்தியத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவோம்.

இந்த பாடசாலை எதிர்வரும் பெறுபேறுகளின் மூலம் சிறந்த இடத்தினை தேசிய ரீதியில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்நோக்கத்தை இறைவன் அங்கீகரிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்துக்கொள்வதுடன், அதிகூடிய புள்ளியைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களை வாழ்த்துவதுடன், உங்கள் எதிர்காலம் சிறந்ததாக அமையவும் இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கின்றேன். அத்தோடு இப்பாடசாலையின் கல்வி எழுச்சியின் பங்காளர்களான அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

கல்லூரியின் அதிபர் சஹீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 2017 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்த 49 மாணவர்கள் மற்றும் அதே ஆண்டில் க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌவரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவின் போது, விஞ்ஞான கழக மாணவர்களால் “தெரிப் பொழி” சஞ்சிகையின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியை விஞ்ஞான கழக தலைவரிடமிருந்து, கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கனமூலை அமைப்பாளருமான பைஸர் மற்றும் ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஹிஸாம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related Post