Breaking
Thu. Dec 19th, 2024

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (25) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால வெற்றிடமாக உள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும், பொத்துவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், பொதுமைதானம் ஒன்றை அமைத்தல், கல்வியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பொதுச்சந்தை சதுக்கத்தின் நிர்மானங்களை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆளுநர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன் போது, பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் ஒன்றினை தற்போது உபவலயம் இருக்கும் இடத்திலேயே அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக சாதகமான நிலைப்பாட்டை வழங்கிய ஆளுநர், ஜனாதிபதியும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த விடயம் தொடர்பில் தன்னிடம் பல தடவைகள் பேசியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தனியான கல்வி வலயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு துரிதகதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், ஆளுநர் உறுதியளித்தார்.

அத்துடன், பொத்துவில் வைத்தியசாலைக்கான சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், அவ்வாறு நியமிக்கும் போது, பொத்துவில் பிரதேசத்திலுள்ள சிற்றூழியர்களையே வைத்தியசாலைக்கு நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன்அலி, பொத்துவில் பிரதேச சபை உறுப்பினகர்ளான என்.எச்.முனாஸ், அன்வர், சதாத் ஆகியோரும், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் உட்பட பொத்துவில் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

(தி)

Related Post