-ஊடகப்பிரிவு-
பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை, இலாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.
தற்போது இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கனவே 100 நாள் அரசாங்கத்தில் அவரது அமைச்சின் கீழ் இந்த நிறுவனம் இருந்த போது, உற்பத்திச் செயற்பாடுகள் அதலபாதாளத்துக்குச் சென்றதாகவும், கரும்பு உற்பத்தியின் வீழ்ச்சி குறைவடைந்து, வருமானம் வீழ்ச்சி கண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை சீனி நிறுவனத்தின் கீழான தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்களில் சுமார் 200 பேர் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர். இந்த சந்திப்பின் போது, பௌத்த தேரர்களும் உடனிருந்தனர்.
கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இந்த நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்த அவர்கள், ஊடகவியலாளர்களிடமும் கருத்து தெரிவித்தனர்.
“இன ரீதியான சிந்தனைகளும், எண்ணங்களும் கூர்மைப்படுத்தப்பட்டு சிங்கள பாமர மக்கள் பிழையான புரிதலுடன் வாழும் இந்த காலகட்டத்தில், அதே சமூகத்தைச் சார்ந்த தொழிலாளர்களாகிய நாங்கள், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அந்த நிறுவனத்தை கையளிக்குமாறு குரல் கொடுப்பது, அவர் இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கிய அமைச்சர் என்பதினாலேயாகும்.
அவர் திறமையானவர். அவரது பணிகளில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் இந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்ற பின்னர், இந்தத் துறையுடன் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வு சிறப்பாகியது. குறைந்த வருமானத்துடன் வாழ்க்கை நடாத்திய நாம், இன்று ஓரளவு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்தத் துறையினால் எமக்குக் கிடைக்கும் நன்மைகளே காரணம். சம்பளத்துடன் தற்போது போனஸ் கிடைக்கின்றது. அதுமட்டுமின்றி கொடுப்பனவுகள் காலதாமதமின்றி இடம்பெறுகின்றன. நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்கின்றது” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த முற்போக்குத் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் ஸ்ரீபால் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் விக்டர் ஆகியோர் கூறியதாவது,
“இது ஓர் அரசியல் பிரச்சினை அல்ல. அமைச்சர்களுக்கும், எங்களுக்குமிடையிலான பிர்ச்சினைகளும் அல்ல. இது எமது வாழ்வாதாரப் பிரச்சினை. இந்த விடயங்களை நாங்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் எடுத்துரைத்தோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இலாபத்தில் இயங்கிய நிறுவனம் ஒன்றை, ஏற்கனவே நஷ்டத்தில் இயக்கிய ஓர் அமைச்சரிடம் மீண்டும் கையளித்திருப்பது ஏன் என்றும் விளங்கவில்லை.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நிறுவனத்தை விஞ்ஞான ரீதியாக முன்னேற்றினார். எனவே, இந்த நிறுவனத்தை மீண்டும் அவரிடம் கையளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறினர்.