மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிங்கள கிராமமான கெவிலியாமடு கிராமத்தில் “செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.நிமால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்டார, பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது செமட்ட செவன வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கெவிலியாமடு பிரதேசத்தில் 25 வீட்டுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஐந்து இலட்சம் பெறுமதியான ஐநூறு சதுர அடியை கொண்ட வீடானது இருபத்தைந்து பயனாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தெரிவித்தார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸவின் வழிகாட்டலில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியால் வறிய மக்களுக்கான வீடுகள் அமைக்கும் பணியின் அடிக்கல் நடும் வைபவம் இடம்பெற்றது.
-முர்ஷிட் கல்குடா-