Breaking
Sat. Nov 23rd, 2024

உண்மையைக் கண்டறிந்து உரையாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவ மாணவிகள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்”
என ACMC இன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பாராளுமன்றத்தில் தனது கன்னியுரையில் தெரிவித்தார்.

உண்மை நிலை கண்டறிந்து அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தின் மீதான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” என்றும் அவா் கூறினார்.
உபவேந்தர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகளின் அடிப்படையிலேயே தனது வீட்டின் மின்கட்டணம் மற்றும் நீர்க்கட்டணம் என்பன பல்கலைக்கழகத்தினால் செலுத்தப்பட்டது. தேவைப்படின் இதற்கான ஆவணங்களைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட கலாநிதி இஸ்மாயில் நேற்றையதினம் நடைபெற்ற பொதுக் கணக்குகள் குழுவின் அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு கன்னியுரையாற்றினார்.

கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் கலாநிதி இஸ்மாயில் பதவியேற்றபோது உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்திருந்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
உபவேந்தராக இருந்தபோது எனது வீட்டுக்கு தண்ணீர் கட்டணமும் மின்சாரக் கட்டணமும் செலுத்தப்பட்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியிருந்தார். உபவேந்தர் பதவிக்காக பல்வேறு சலுகைகள் சட்டரீதியாக வழங்கப்பட்டது. மூதவை மற்றும் பல்கலைக்கழகத்தின் உரிய அனுமதிகள் பெறப்பட்டே சலுகை வழங்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. தேவை ஏற்படின் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கத் தயாராகவிருக்கின்றேன்.

அதேநேரம் தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள், ஆண்கள் பல்வேறுபட்ட மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் உண்மையை நிரூபித்த பின்னர் பல்கலைக்கழகத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார். தேசிய பட்டியலின் ஊடாக இன்று பாராளுமன்ற கதிரையை அலங்கரிப்பதற்காக எனது கட்சியின் தலைவர் மற்றும் அஇமகா தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினதும் பரிந்துரைக்கு எனது நன்றிகள்.

யுத்தம் முடிவடைந்து பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ள போதும் மக்கள் பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.
இன விரிசல்கள் காரணமாக அபிவிருத்தியும் நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து நாட்டின் வளர்ச்சிக்காகவும் எதிர்கால சந்ததிக்காகவும் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களைச் செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாட்டை பொருளாதார ரீதியாகவும் பலம்மிக்க நாடாகவும் முன்னேற்றி நாட்டிலுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு சரியான முடிவுகளைக் கட்டி ஒருதாய் பிள்ளைகள் போன்று செயற்பட வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
அரசியல் ரீதியாகவும் ஏனைய உரிமைகள் ரீதியாகவும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் உரிமைகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், மக்கள் ஒற்றுமையோடு வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
பாராளுமன்றத்தில் பல்வேறு பேதங்களைப் பற்றி பேசி காலத்தை வீணடிக்காது நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என சிந்திக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

80 வீதத்துக்கும் அதிகமான சனத்தொகையினர் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கும் பங்களிப்பு செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்வை வளப்படுத்தக்கூடிய சரியான திட்டம் இல்லை. மக்கள் பேதங்களை மறந்து பொருளாதார முன்னேற்றத்துக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Related Post