-சுஐப் எம். காசிம்-
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் சிதைந்து போன சமூக நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் இன்று வரைக்கும் மீள்குடியேற்றமே தடையாகவுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான பல கருத்தியல் தர்க்கங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடமாகாண செயலணியும் இந்தத் தர்க்கக் கணைகளுக்கு இலக்காகத் தவறவில்லை. எனினும் எல்லாத் தர்க்கங்களும் இனவாத நதியிலிருந்து பிரிந்து பாயும் கிளை ஆறுகளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளன.
எந்த நல்லிணக்கத்துக்காக மீள்குடியேற்றம் அவசியப்படுகிறதோ அந்த அவசியத்தின் இருப்பை பலமிழக்கும் வகையிலேயே இந்தத் தர்க்கங்கள் முளைவிட்டுக் கிளை விடுகின்றன.
போர்க்களத்தின் அந்திம கால எச்சங்களாகவுள்ள இடப் பெயர்வுகள் சமூக நல்லிணக்கத்துக்குப் பெரும் இடைஞ்சலாகவுள்ளதன் யதார்த்தத்தை சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுள்ளது. போரினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், அங்கவீனங்கள், சொத்து இழப்புக்கள் அனைத்தும் நஷ்டஈடுகள் வழங்கி சரிசெய்யப்படுவதால், போரின் வடுக்கள் ஆற்றப்படுகின்றன. ஆனால் மீள்குடியேற்றம் மட்டுமே எல்லா நாடுகளிலும் சாவாலுக்குள் நிற்கிறது.
இறைவனின் இயற்கை வளங்களில் ஒன்றான நிலத்துடன் தொடர்புள்ள விடயமிது. உலகம் தோன்றிய காலம் முதல் இருந்த நிலமே இன்றும் உள்ளது. இது மனிதப்பிறவிபோல் அதிகரிப்பதில்லை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்த முதலாவது மனிதனான ஆதாமுக்கும் இதேயளவு நிலம்தான். இன்றுள்ள ஐநூறுகோடி மனிதர்களுக்கும் அன்றிருந்தது போல இதேயளவு நிலம்தான். இதனால்தான் இந்த நிலத்துக்கும் இத்தனை மவுசு. மீள்குடியேற்றமும் இந்த நிலத்துடன் தொடர்புற்றிருப்பதாலேயே அவசரமாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. போர்க்கால எச்சங்களாக மீள்குடியேற்றமே இம்மாகாணத்தில் எஞ்சி நிற்கின்றது. இதற்காகவே வடமாகாண மீள்குடியேற்ற செயலணியும் தற்போதைய அரசினால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்கா, பைசர் முஸ்தபா, ரிஷாத் பதியுதீன், சுவாமிநாதன் ஆகியோர் வலுவான காரணங்களின் அடிப்படையில் உள்ளடக்கப்பட்டு இணைத்தலைவர்களாக்கப்பட்டுள்ளன.
மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து முற்றாக வேறுபட்டு தனித்து இயங்கும் இச்செயலணி அமைச்சர் ரிஷாதின் அயராத முயற்சிக்கு கிடைத்த அறுவடை. ‘அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்’ என்பதற்கிணங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு இதைப் பிரசவிப்பதில் அதிக வலியிருந்தது. விடுதலைப்புலிகளினால் வலிந்து அகதிகளாக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக தெருக்களில் திரியும் வடபுல முஸ்லிம்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது இனவாதிகள் சுதந்திரமாக உலவும் இந்நாட்டில் அவ்வளவு இலகுவானதல்ல. ஒருகாலத்தில் அமைச்சர் ரிஷாதும் இருப்பிடமில்லாது அகதியாய் அலைந்தவர்தான். இந்தவலிதான் இச்செயலணியை செயலூக்கமாக்கியது. தமது கைத்தொழில் அமைச்சினூடாக மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு அமைச்சர் ரிஷாத் இந்தப் பணிகளுக்கான அடிப்படை வசதிகளை பல்வேறு சவால்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் செய்துவருகின்றார்.
காணிகளை அடையாளம் காணல், துப்பரவு செய்தல், மின்சார வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி, தொழில்வாய்ப்புகள் என்பவற்றை ஏற்படுத்திய பின்னரே மக்களை மீளக்குடியேற்றுவதில் அக்கறை செலுத்துகிறது இச்செயலணி. இதன்விவேகம் சாதனைகளை அவதானித்த வடக்கின் வாடைகூடத் தெரியாத, பிரசவ வலி புரியாத பலர் இச்செயலணியில் தங்களையும் இணைக்குமாறு கோருகின்றனர். இச்செயலணியில் இணைவதை விட இதன் செயற்பாடுகளைக் குழப்பியடிக்கும் பின்னணிகள் இவர்களின் கோரிக்கைகளில் புதைந்துள்ளமை புலனாகின்றன. மன்னார், சிலாவத்துறை, கொண்டச்சி, முசலி, அடம்பன், விடத்தல்தீவு, பெரியமடு ஆகிய பகுதிகளில் இச்செயலணியால் முன்னெடுக்கப்பட்ட வேலைகள் எவற்றையுமே முன்னர் செய்யாது அல்லது செய்ய இயலாது அல்லது செய்யவிடாது தடுத்து சோம் பேறிகளாய் இருந்து அறிக்கை விட்டவர்களையும் இச்செயலணியின் செயற்பாடுகள் அதற்றியுள்ளது. இந்த அதிர்ச்சியின் வெளிப்பாடுகளே வடமாகாண செயலணிகளின் செயலாற்றுகைக்குள் தங்களையும் இணைக்குமாறு இவர்களைக் கோர வைத்துள்ளன.
வில்பத்துக்காணிகளை துப்பரவு செய்தபோது பேரினவாதம் வரிந்;துகட்டிக் கொண்டு மல்லுக்கு வந்த வேளை வடபுல முஸ்லிம்களுக்காகப் பேசாத தனித்துவ தலைமை, வடமாகாணத்தை தனித்த தமிழர்களின் தாயகமாகப் பார்க்க ஆசைப்படும் புலிகளின் சிந்தனையிலுள்ள தமிழ் பெரும்பான்மைவாதிகள் வில்பத்து விடயம் விஸ்வரூபம் எடுக்க வேண்டுமென்று விரும்பியிருப்பர்.
இவ்விடத்தில் தனித்து நின்று தோள் கொடுத்தது வடபுல முஸ்லிம்களின் தலைமையே. இத்தனைக்கும் இன்னும் ஒரு விடயத்தைப் புரிவதில்தான் வடமாகாண செயலணிக்கு புதிதாக உரிமைகோருவோரின் சுயரூபங்களைப் புரிந்து கொள்ள உதவும். வடமாகாண செயலணி அமைக்கப்பட்ட கையோடு இச்செயலணியை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றியது வடமாகாண சபையே. இச்சபையே இதில் தங்களையும் சேர்க்குமாறு இப்போது தப்புத்தாளம் போடுகின்றது. வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது நஷ்டமா? இலாபமா? என்பதைக் கணிப்பிட முடியாத இவர்கள் செயலணியின் செயற்பாடுகள் இலாபமுறுவதைக் கண்டு பங்கு கேட்கின்றனர்.
‘இலாபத்திலே தான் பங்கு’ ‘நஷ்டத்தில் இல்லை’ என்ற நிலைப்பாட்டிலே வடமாகாண சபை உள்ளதோ தெரியாது. முல்லைத்தீவில் மீள்குடியேறச் சென்ற முஸ்லிம்களை ஒருஅடிகூட நகரவிடாமல் வீதிக்குக் குறுக்காகப் புரண்டு படுத்த இவர்கள், வட மாகாண செயலணியை அடியோடு நிராகரித்த இவர்கள் இப்போது பங்கைப் பறிக்க முயல்வது ஏன்? மீள்குடியேற்ற அமைச்சைவிடவும், வடமாகாண செயலணி அதிக பங்காற்றுவதனாலா? அல்லது இந்தப்பங்குகளும், பலாபலன்களும் முஸ்லிம்களுக்கு கிடைப்பதைத் தடுக்கவா? என்பது தான் இதுவரை புரியவில்லை. வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி 1990க்கு முன்னர் வெளியேறிய முஸ்லிம், மற்றும் சிங்களவர்கள் என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறைக்குள் தமிழர்களையும் சேர்க்குமாறு அமைச்சர் சுவாமிநாதனிடம் சில தமிழ் தரப்புக்கள் கோரிக்கை விடுத்தன. நியாயமான சிந்தனை.
யாராக இருந்தாலும் வெளியேறியவன், வெளியேற்றப்பட்டவன் எல்லோரும் சொந்த இடங்களில் குடியேற வேண்டும். இதில் மத, இன வேறுபாடுகளுடன் செயற்படும் நோக்கம் செயலணிக்கு இல்லை. இருந்திருந்தால் 2009ஆம் ஆண்டு மெனிக்பாம் சிறையில் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் தமிழ்ச் சகோதரர்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீள்குடியேற்றிருப்பாரா? அமைச்சருக்கு அன்றிருந்த பலத்தில் முஸ்லிம்களையும் குடியேற்றிருக்கலாமே! ஏன் செய்யவில்லை. அமைச்சரின் மனிதாபிமானப் பார்வையில் தமிழர்களின் வலியே முதன்மை எனப்பட்டது.
இந்த மனிதாபிமானத்துக்கு இடம் கொடுக்க விருப்பமின்றிப்போன சிலர் ரிஷாதிடமிருந்த மீள்குடியேற்ற அமைச்சை மீளப்பெறுவதில் மறைமுகப் பங்காற்றியமை தமிழ் மொழிச் சமூகத்தின் வரலாற்றுத்தடத்தில் அழிக்க முடியாத வடுக்களாகும். இந்த வடுக்களின் தளத்தில் இன்னும் சில தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவதை மஸ்தானுக்கு கிடைத்த அமைச்சுப் பதவியில் கண்டுகொள்ள முடிந்தது. உண்மையில் இந்துமத விவகார அமைச்சை ஏற்பதற்கு மஸ்;தான் மறுத்திருந்தால் அது இனவாதத்துடன் இயைந்த மதவாதமே. இத்தனைக்கும் மஸ்தான் தாராளமாக அமைச்சுப் பொறுப்பை ஏற்றார். இதற்காக தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த சொற்கணைகள் மதத்தாலும், இனத்தாலும் தமிழர்களும், முஸ்லிம்களும் வேறுபட்டவர்கள் என்பதை தமிழ்த்தேசியமே ஊர்ஜிதப்படுத்திற்று.
இதனால்தான் வடக்கில் ஏனைய மதத்தவரை இருக்கச் செய்துவிட்டு முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றினார்களோ!
இதனாலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்தனியலகுகள் தேவைப்படுகிறதோ? மதவேற்றுமைகளை மறந்து பொதுவான யதார்த்தத்தில் செயற்பட முஸ்லிம்கள் விரும்பினாலும், அடிப்படைவாதத் தமிழர்கள் அதனை விரும்பப் போவதில்லை என்பது மட்டும் தற்போது தெளிவாகியுள்ளது.