18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிட முடியுமா? இரண்டாவது பதவிக் காலத்தில் நான்கு வருடத்தின் பின் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியுமா? போன்ற விவகாரங்கள் தொடர்பில் நேற்று உச்ச நீதிமன்றம் தமது முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது.
அரசியலமைப்பின் 129 (1) சரத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டதற்கமைய பத்துப் பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் அவ்விவகாரம் கவனத்திற்கெடுத்துக்கொள்ளப் பட்டதற்கிணங்க அதன் ஆலோசனை வெளியிடப்பட்டதுடன், அது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், உச்ச நீதிமன்ற நீதிபதிகளான கே. ஸ்ரீபவன், சந்ரா ஏக்கநாயக்க, புவனே அலுவிஹாரை, சிசிர டீ ஆப்ரூ, சரத் ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் கருத்து விளக்கம் இடம்பெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளதால் அக்குழுவில் அவர் இடம்பெற்றிருக்கவில்லை.
ஜனாதிபதி கடந்த 5ம் திகதி உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியிருந்தார். அரசியலமைப்பின் 31 (3) (ஏ) (1) சரத்திற்கமைய மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா? என உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியா னத்தை ஜனாதிபதி கோரியிருந்தார்.
இதற்கமைய தொடர்புபட்ட மனுதாரர்கள் கடந்த 07 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அவர்களின் எழுத்து மூலமான கருத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கையளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த அறிவித்தலின்படி கல்விமான்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள், பெளத்த பிக்குகள், சுயாதீன அமைப்புகள், சட்டத்தரணிகள், அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், ஊடக ஆசிரியர்கள், அரசியலமைப்புகள், அதன் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன சார்பில் 38 மனுக்களை உச்ச நீதிமன்ற பதிவாளர் மஹேசி ஜயசேகரவிடம் கையளித்துள்ளன.
கடந்த 07 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்ட இந்த இடைக்கால மனு பத்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் நீண்டநேர கலந்துரையாடலுக்குப் பின் நேற்றைய தினம் அதன் தீர்ப்பு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பட்டுள்ளது.
பத்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு கடந்த சனிக்கிழமை 08 ஆம் திகதி கூடியுள்ளது. 18வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையாக போட்டியிடுவது அரசியலமைப்புக்கு அனுகூலமானது என இது தொடர்பில் ஆதரவான கருத்துக்களை முன்வைத்த நிபுணர்கள் தெரிவித்தனர்.
18வது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது என்றும், அதை நிறைவேற்றியதன் பின்னர் அந்த சட்டமூலம் அரசியல் மைப்புக்கு அனுகூலமானதா? இல்லையா? என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வியாக்கியானமானது அரசியல மைப்பின் 129 வது சரத்துக்கமைய இடம்பெறுகின்றதென்றும் 129 (2) சரத்துக்கமைய இரகசிய பூர்வமாக இது இடம்பெற வேண்டுமென்றும் இந்த வியாக்கியானத்துக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி பந்துல வெல்லால தெரிவித்தார்.
-தினகரன்-