Breaking
Mon. Nov 25th, 2024

13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற 96 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவில் சிறப்பு அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் அழைப்பின் பெயரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

 

இந்த நிகழ்வில் சர்வதேச கூட்டுறவு சம்மேளனப் பணிப்பாளர் டாக்டர். ஏ.கே.சிங் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,

பல காலத்தைச் செலவழித்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலே மாகாண கூட்டுறவு அமைச்சர்களை அழைத்து நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்னர், கூட்டுறவுத்துறை சார்ந்த நிபுணர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கூட்டுறவுக் கொள்கை ஒன்றை உருவாக்குவதில் வெற்றி கண்டோம். இந்தத் துறையை சக்திமிக்கதாகவும், வலுவுள்ளதாகவும் மாற்றுவதற்கு புதிய கொள்கை உதவுமென நாங்கள் நம்புகின்றோம். மேலும், மத்திய மாகாண அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் துரை ராஜசிங்கம் ஆகியோரின் விஷேட பங்களிப்புக்காக நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

கூட்டுறவுத் துறையை நான் பொறுப்பேற்றதன் பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் ஆக்கபூர்வமான திட்டங்களையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வெற்றிகரமாக அந்தத் துறையை முன்னேற்றி வருகின்றோம்.

யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் சர்வதேச கூட்டுறவு தின விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு, பிரதி அமைச்சர் அமீர் அலி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த வைபவத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

100 வருடம் பழைமை வாய்ந்த கூட்டுறவுத்துறையானது 107 நாடுகளில் வியாபித்துள்ளது. இந்தத் துறை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நலன்களை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது இயங்கி வருகின்றது.

இந்த துறையில் 8.5 மில்லியன் அங்கத்தவர்கள் ஈடுபாடுகாட்டி வருவதுடன், எல்லா மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. இலங்கையின் சனத்தொகையில் 40% சதவீதமானவர்கள் கூட்டுறவுத்துறையில் அங்கத்தவர்களாக உள்ளனர்.

கூட்டுறவுத்திட்டமானது நுகர்வோரின் நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ளாது, அதற்கப்பால் வங்கி, நிதி அலுவல்கள், விவசாய நடவடிக்கைகள், மீன்பிடிக் கைத்தொழில், சுகாதார சேவை, கல்வி, இளைஞர் விவகாரம், காப்புறுதி, பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் குருநாகலில் இடம்பெற்ற 95 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவின்போது தனதுரையில், மக்களின் வேண்டுகோளை ஏற்று பல வாக்குறுதிகளை வழங்கினார். அவற்றை இந்த ஒருவருட காலத்துக்குள் முறையாக நடைமுறைப்படுத்தி இருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி எமக்கு இருக்கின்றது.

இந்த வருட கூட்டுறவு தின விழாவையொட்டி முக்கிய சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், இம்மாதம் 02ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் வருமான வரியில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்கங்களினால் இதுவரை செலுத்தப்படாதிருந்த கடன் பளுவை மீளச் செலுத்துவதற்கான தேவையான நிதியை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த நிதியானது கிடைக்கப்பெற்றதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அந்த நிதி வழங்கப்பட்டு அவர்களுக்கு விமோசனம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கு தீர்வையற்ற வாகனம் அல்லது லொறி ஒன்றை வழங்க வேண்டுமென கூட்டுறவு ஊழியர்கள், ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி, கூட்டுறவுத்துறைச் சார்ந்தவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுடைய ஊதியத்துக்கு மேலதிகமாக 1000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதை இன்றைய கூட்டுறவு தின விழாவில் அறிவிக்கின்றேன்.

கூட்டுறவுத்துறையில், அறிவை வளர்ப்பதற்காக பொல்கொல்லையில் இயங்கும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தை பல்கலைக்கழக கல்வி அந்தஸ்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, இந்த நிறுவனத்தில் தமிழ் மொழி மூலம் கற்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போதைய அரசாங்கத்தின் பத்து இலட்சம் பேருக்கான தொழில் வழங்கும் திட்டத்துக்கு கூட்டுறவுத்துறையின் பங்களிப்பும் உள்ளதெனவும், அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், எனது அமைச்சும் அந்த திட்டத்திற்கு பூரண பங்களிப்பை நல்கி வருகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

 

இந்த விழாவில், பிரதி அமைச்சர்களான புத்திக்க பத்திரன, அமீர் அலி, அலிசாஹிர் மௌலான, இராஜாங்க அமைச்சர்களான ஹிஸ்புல்லா, சிறியானி விஜேவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், நசீர், இஸ்மாயில், சி.யோகேஸ்வரன் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் நசீர், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க பீரிஸ், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சுபைர், உதுமான் லெப்பை, தேசிய அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனப் பணிப்பாளர் அம்ஜாத், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

-சுஐப் எம்.காசிம்-

 

Related Post