Breaking
Mon. Jan 13th, 2025

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எதிரணியில் இணைந்து கொள்வார்கள் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ‘தூய்மையான நாளை’ அமைப்பு கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்கான மக்கள் சக்தி எம்மிடம் இருக்கின்றது. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்கி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்போம். இது உறுதி. இந்த மேடை பொது வேட்பாளரை அறிவிக்கும் மேடை அல்ல. ஆனால், பொது வேட்பாளர் ஒருவரை உருவாக்கும் மேடை.

நாம் முன்வைத்துள்ள 19வது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அவர் இல்லாதொழிக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாது தேர்லொன்றுக்கு செல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகிறார். இதனை நாம் எதிர்க்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பொது வேட்பாளரைக் களமிறக்கவே இன்று நாம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ளோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காமல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்குச் செல்வாராயின், தேர்தல் அறிவிக்கப்படும் தினத்தில் அரசிலிருந்து 10 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வெளியேறுவர். தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க சரியான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றுள்ளார்.

Related Post