Breaking
Tue. Nov 26th, 2024

அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி, அந்த மாவட்டத்துக்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

அனுராதாபுர மாவட்டத்தில் நாச்சியாதீவு, கலாவெவ மற்றும் நேகம ஆகிய இடங்களில், இஷாக் ரஹ்மான் எம்.பியின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (11) பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வுகளில் தலைமையேற்று உரையாற்றிய இஷாக் எம்.பி கூறியதாவது,

அனுராதபுர மாவட்டத்தின் அரசியல் வரலாற்றிலே எந்தவொரு கட்சியோ அல்லது கட்சித் தலைவனோ சிந்திக்காத ஒரு விடயத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நன்கு திட்டமிட்டு அரசியல் காய்களை தூரநோக்குடன் நகர்த்தியதனாலேயே, இந்த மாவட்டத்தின் சிறுபான்மை மக்களுக்கென பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய ஒரு பிரதிநிதித்துவத்தை, இறைவனின் உதவியுடனும், இந்த மாவட்ட மக்களாகிய உங்களின் ஒத்துழைப்புடனும் அவர் உருவாக்கித் தந்தார்.

இலங்கை சுதந்திரம் அடைந்திருந்த போதும், அனுராதபுர மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் வாழும் கிராமங்களில், அந்த சுதந்திரம் கிடைக்காத நிலையே இருந்தது. அந்த சுதந்திரத்தின் பலனை அனுபவிக்க முடியாது பொருளாதார அபிவிருத்தியிலும், வாழ்க்கைத் தேவையிலும் நமது சமூகம் பின்னடைவு அடைந்திருந்ததை, அமைச்சர் ரிஷாட் கண்டுகொண்டதனாலேயே இந்த முயற்சியில் துணிந்து இறங்கினார்.

கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ரணிலுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே, நான் அந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டேன். கட்சி, நிறங்கள், சின்னங்கள் என்ற பேதங்களை மறந்து, நமது சமூகத்தவர்கள் எனக்கு ஆதரவளித்தது மாத்திரமின்றி, பெரும்பான்மைச் சமூகத்தினரும் எனது வெற்றிக்கு உழைத்தனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும், அவர் இந்த பிரதேசங்களில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரங்களினாலும் பெரும்பான்மை மக்களின் உள்ளத்தையும் எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது.

சிறுபான்மைச் சமூகத்துக்கு ஏதாவது பிரச்சினை நேர்ந்தால், அங்கு முன்னிற்பவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தான் என்பதை, நான் முன்னர் முகநூல்களிலும், இணையத்தளங்களிலும்தான் கண்டிருக்கின்றேன்.

எனினும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சியில் இணைந்து நான் எம்.பியானதன் பின்னர்தான், அவரது துணிவான செயற்பாடுகளையும், இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சாத மனத்திடத்தையும் நேரில் கண்டிருக்கின்றேன். பாராளுமன்றத்தில் அவர் நமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும் போதோ அல்லது பிரச்சினைகளைத் தட்டிக்கேட்கும் போதோ, எந்தக் கட்சித் தலைவனுக்குமே அஞ்சாத ஒரு தன்மையையும் நேரில் பார்த்திருக்கின்றேன்.

அதுமாத்திரமின்றி கண்டியிலே அண்மையில், நமது சமூகத்துக்கு எதிராக அரங்கேறிய கொடூரங்களின் போது, அவரது துணிவான, தீரமிக்க செயற்பாடுகளைக் கண்டு வியந்திருக்கின்றேன். கண்டியில் ஊரடங்கு அமுலில் இருந்தவேளை ஆயுததாரிகளையும், குழப்பவாதிகளையும் தவிர, எவருமே இல்லாத அந்தப் பிரதேசத்தில் அவர் நின்றுகொண்டு, கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நமது சமூகத்தவர்களை தைரியப்படுத்தவும் அவர் மேற்கொண்ட செயற்பாடுகள் இன்றும் எனது கண்முன்னே வந்து போகின்றன. அந்த சந்தர்ப்பத்தில் படைத்த ஒருவனைத் தவிர, வேறு எவருக்குமே பயப்படாதவராகவே அந்த நடுநிசியிலும் அவர் இருந்தார்.

என்னைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் நான், இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் பணியாற்றுகின்றேன். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். இனிவரும் காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும், உதவியிலும் பாரிய வேலைத்திட்டங்களை நாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவோம் எனவும் இஷாக் எம்.பி தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு-

 

Related Post