Breaking
Tue. Nov 26th, 2024

கடும்போக்குவாதம் உயிர்வாழும் வரை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள் எதிர்நீச்சலுடன் சுழியோடியே தமது சமூக அபிலாஷைகள், அடையாளங்களை அடைய வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில் தனிப்பெரும்பான்மை தலையெடுப்பதும், இன்னொரு சமூகத்துக்கான அபிவிருத்திகளை இனச்சாயம் பூசித்தடுப்பதும் நிலைக்கும் வரை, இன இணக்கங்கள் துருவங்களாகவே தென்படப்போகின்றன.

தாம் சார்ந்த சமூகத்துக்கு எதையும் செய்யாத சில மக்கள் பிரதிநிதிகள், இன்னொரு சமூகத்தின் தலைவன் எதையாவது சாதிப்பதை பொறுத்துப்போகும் பக்குவத்தின் அடித்தளத்திலிருந்தே நல்லிணக்கம் சாத்தியப்படும். ஆனால், இப்பக்குவம் எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. தலைமைகள், கட்சிகளுக்கு இடையில் இன்று ஏற்பட்டுள்ள தன்மானப் போட்டிகள், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கவிடாது கோபுரங்களாகக் குறுக்காக நிற்கின்றன. வடக்கில் கால்பதித்து கிழக்கு வரை வெளிச்சம் போடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைக்கு இந்தத் தலைவிதி பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கட்சியின் 15 வருட அரசியலில் கடந்த 05 வருடங்கள் மிகப்பெரும் சோதனைக் களமாகக் காட்சியளிக்கிறது. எதற்கெடுத்தாலும் மக்கள் காங்கிரஸின் தலைமையே குறிவைக்கப்படுகிறது. வில்பத்துக்காடழிப்பு, முல்லைத்தீவு குடியேற்றம், சீனிக்கொள்வனவு, அமைச்சரின் வாகனப் பாவனையென அனைத்தும் இனவாதிகளால் அணுவணுவாக அவதானிக்கப்படுகின்றன. இது ஏன்? ஏன்ற கேள்விக்கு விடையில்லாத வெறுமையே, வடபுல மக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு பின்னால் அணிதிரள வைக்கின்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை இனவாதிகளின் இவ்வாறான எதிர்க்கணைகளும், சகோதரக் கட்சிகளின் கற்பனைக் கதைகளும் காட்டிக் கொடுப்புக்களும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை புடம்போட்டுக் கெட்டிப்படுத்துகின்றன.  ‘பனை மரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும் கள்ளு குடித்ததாகவே’ கூப்பாடு போடுகின்றனர். சுங்கத் திணைக்களத்தின் சாதாரண பாதுகாப்பு உத்தியோகத்தர் விடும் தவறு அல்லது அசிரத்தைக்கும் ரிஷாட்டின் தலைமை விமர்சிக்கப்படுகின்றது.

அண்மையில் சீனிக் கொள்கலனுக்குள் கொக்கைன் போதைப் பொருள் இருந்ததற்காக அமைச்சரை பதவி விலகக்கோரும் விவகாரம் வரை நிலைமை பூதாகரமாக்கப்பட்டது. எங்கோ ஏற்றப்பட்ட சீனி, தொலைவிலே உள்ள துறைமுகம், எந்த நாட்டினதோ கப்பல், பாரிய இராட்சத வர்த்தகக் கம்பனிகளின் வியாபார டீல்-இவற்றுக்குள் எது நடந்தாலும், இலங்கையில் உள்ள அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்க முடியுமா? சதொச களஞ்சியசாலைக்குள் பொருட்கள்  வந்து சேர்ந்தாலும் உள்ளே இருப்பதை, ஒவ்வொரு கொள்கலன்களாக அமைச்சர் பார்வையிட வேண்டுமெனக் கோருவது எந்தவகையில் நியாயம்?  அமைச்சின் நிர்வாகப் பொறுப்பும், செயற்பாடுகளுமே உரிய அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்குகின்றன என்ற யதார்த்தத்தை இவர்கள் ஏற்க மறுப்பது ஏனோ?

இந்த யதார்த்தங்களை மறந்துதான் இனவாதம், மக்கள் காங்கிரஸின் தலையைக் கொய்யப்பார்க்கின்றது.  கெரில்லாப்போரில் அப்பாவிகள் வீழ்த்தப்படுவது போன்று எதையாவது சொல்லி, வடபுல மக்களுக்கான எல்லாவற்றையும் நிறுத்துவதில் கடும்போக்குவாதம் கனகச்சிதமாகச் செயற்படுகிறது. இவர்களுக்குத் தீனி போடுவது போல சகோதர கட்சிகள், தமது சமூகத்தின் அடையாளத்தை அழிக்கப்பார்க்கின்றன.

சாதாரண வயிற்றுப் பசியில் ஆயுளை இழக்கும் பரம ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை  முதலில் அமைத்துக் கொடுப்பதே மக்கள் காங்கிரஸின் வடக்குப் பார்வை. இதற்காக, ஆயுளின் எல்லை வரை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முழு மூச்சுடன் உழைக்கின்றார். இதைத் தடுப்பது உறவுகளை இழந்து, உடைமைகளைப் பறிகொடுத்து, இருப்பிடங்களைக் கைவிட்டு வெளியேறிய வடபுல முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை படுகுழியில் வீழ்த்துவதாக அமையும். போரின் பாரிய படுகுழிகளில் வீழ்ந்து மீண்டெழும் சமூகத்தின் அபிலாஷைகளை, போர்ப்புலத்தில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வரும்  ரிஷாட் பதியுதீனாலேயே உணரமுடியுமென்ற நம்பிக்கை, இம்மக்களிடம் இன்னும் வற்றிப்போகவில்லை. இந்த நம்பிக்கை மீதான மற்றொரு வேட்டையை வாகன வடிவத்தில் ஏவியுள்ளது இனவாதம்.

அமைச்சர் ஒருவருக்கு மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர அமைச்சரின் பிரத்தியேகச்செயலாளர், இணைப்புச் செயலாளர்கள் மற்றும்  அதிகாரிகள் உள்ளிட்டோர் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். திருத்த வேலைகள், எரிபொருள் நிரப்பலுக்காகச் செல்லும் வாகனங்கள் குறித்த அமைச்சின் பெயரிலேயே உபயோகிக்கப்படுவதே வழமை. திருத்த வேலைகளுக்காகச் செல்லும் எல்லா வாகனங்களும் மற்றும் அமைச்சரின் ஆளணியினருக்கு, அரசாங்கத்தின் சுற்றுநிருபத்துக்கிணங்க வழங்கப்பட்டுள்ள வாகனங்களும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடையது என, தலையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்க முனைந்த தீய சக்திகளுக்கு திருப்பியடித்ததில் வடக்குத் தலைமை திருப்திகொள்கின்றது.

வில்பத்துவிலும், முல்லைத்தீவிலும் அண்ணார்ந்து பார்க்கின்ற மாளிகைகளா கட்டப்பட்டன? ஏழைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை முதலில் வெற்றிகொண்ட பின்னரே, உரிமைப் போராட்டம் பற்றிச் சிந்திக்க முடியும் என்பது அமைச்சர் ரிஷாட்டின் நம்பிக்கை. இதனாலேயே தனியலகு, தனிநிர்வாகம், வடக்கு – கிழக்கு இணைப்பு, பிரிப்பை விட மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், தொழில்வாய்ப்பு,  காணி பகிர்ந்தளிப்பு போன்ற அடிப்படை விடயங்களைச் முதலில் செய்வதில் ஆர்வமாகவுள்ளது மக்கள் காங்கிரஸ் தலைமை. 30 வருட உரிமைப் போரில் சகோதரத் தமிழ் மக்கள் உள்ளதையும், இழந்ததைப் படிப்பினையாகக் கொண்டதே ரிஷாட்டின் அரசியல் பார்வை. இதைப் புரியாதோரே உரிமையை விட சலுகைகளுக்கு விலைபோவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். சிலர் வடக்கில் வந்து தனித்துவமும் பேசுகின்றனர்.

மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கும் வரை மக்களின் உரிமைப் போரை கூவியும் விற்க முடியாது, திணித்தும் விற்க முடியாதென்பதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பயணமாகும். உரிமை பேசும் போராளிகள் இன்று மனநோயாளிகளான காட்சிகளை நாம் மறக்க முடியாது.

-சுஐப்.எம்.காசிம்-

Related Post