கடந்த ஆட்சியில் 600 மில்லியனுக்கு மேலாக நஷ்டத்தில் இருந்த லங்கா சதோச நிறுவனம், கடந்த வருடம் 350 மில்லியனுக்கு மேல் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
லங்கா சதோச நிறுவனத்தின் 401 கிளை ஓட்டமாவடி மாவடிச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) திறந்து வைக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
கடந்த ஆட்சிக் காலத்தில் லங்கா சதோச நிறுவனம் பெரும் நட்டத்தோடும், கடன் சுமையோடும் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பொறுப்பெடுத்து பாரிய மாற்றத்தை கொண்டு வந்து இலாபமீட்டும் நிறுவனமாக லங்கா சதோச நிறுவனத்தினை மாற்றியமைத்துள்ளார்.
அரசியலுக்கு அப்பால் இந்த நிறுவனங்களை நாட்டிலுள்ள மக்களுக்கு நியாய பூர்வமான விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்கின்ற விடயத்தில் எடுத்துக் கொண்ட அதிரடி நிகழ்வின் காரணமாக, கடந்த ஆட்சியில் 600 மில்லியன் ரூபாய்க்கு மேலாக நஸ்டத்தில் இருந்த லங்கா சதோச நிறுவனம், கடந்த வருடம் 350 மில்லியனுக்கு மேல் இலாபமீட்டும் நிறுவனமாக ஆக்கப்பட்டுள்ளது.
ஒரு முஸ்லிம் அரசியல் வாதியின் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டுக்கு கொடுத்திருப்பது என்பது மறக்க முடியாத விடயமாக நாங்கள் பார்க்க வேண்டும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு குறைந்த சுமையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பணிகளை அரசாங்கம் செய்துகொண்டு வருகின்றது.
இதேபோன்று ஓட்டமாவடி பிரதேசத்தில் பாரிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காக எல்லா வசதி வாய்ப்புக்களையும் உள்ளடக்கிய பிரதானமான திருமண மண்டபம் மிகவிரைவில் 150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.றுவைத், ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்கள், லங்கா சதோச நிறுவன உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-முர்ஷிட் கல்குடா-