இன்று இணையத்தளம், முகநூல் மற்றும் ஊடகங்களில் பேசப்படும் செய்தியாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராசா அவர்கள் கண்டுபிடித்த ஒரு செய்தியான “முஸ்லிம்களிடம் ஆயுதம்” என்ற செய்தி இருக்கிறது.
நீண்டகாலத்துக்குப் பின் ஞானம் பிறந்த செய்தி என்றாலும், அதன் சூத்திரதாரிகளில் இன்பராசாவும் ஒருவர் என்றுதான் கூற வேண்டும்
நாட்டின் இறைமைக்கு மதிப்பளிப்பதாக கூறும் இன்பராசா அவர்கள், கடந்த காலங்களில் ஆயுத கலாச்சாரத்துக்கு அடிமையாகி நாட்டின் இறைமைக்கு மாறாக ஆயுதம் தூக்கி போராடியது மடமை என்பது அவருக்கு இப்போது தான் புரிந்துள்ளது. அதனால், ஆயுதக்குழுக்களின் தவறை அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது திணிக்க முற்படுவது என்பது வேடிக்கையாகும்
யுத்தம் முடிவடைந்து உயிர் தப்பிய ஆயுதக்குழுக்கள், முஸ்லிம்களிடம் ஆயுதம் கொடுத்தால் அதற்கு முழு பொறுப்பும் தமிழ் ஆயுத குழுக்களே காரணமாகும். அவர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் கொடுத்திருந்தால் அந்த நபரை அரசாங்கத்திடம் அடையாளம் காட்டி, ஆயுதக்களைவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதை விடுத்து பல ஒலி வாங்கிக்கு முன் அமர்ந்துகொண்டு, இன ஒற்றுமையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் அரசியல் நாயகனாக வலம் வரும் அமைச்சர் றிசாத் அவர்களையோ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளையோ ஆயுதம் பற்றி பேசி குற்றம் கூறுவதில் எந்தப் பலனுமில்லை. இன்பராசா கூறும் குற்றங்களை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள போவதுமில்லை
தற்போது நாட்டில் சகல இன மக்களும் வரவேற்கும் அரசியல்வாதியாக அமைச்சர் றிசாத் அவர்கள் இருக்கின்றார். அவரின் இளம் அரசியல் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போது, வட மாகாண தமிழ் மக்களுக்காக தனது உயிரை கூட மதிக்காமல் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அரசியல் களத்தில் நின்று தமிழ் மக்களுக்கு, தமிழ் அரசியல்வாதிகள் செய்யாத மகத்தான கடமையை செய்துள்ளார். அதனால், இன்றும் வட மாகாண மக்களின் மனதிலிருக்கும் ஒரு மக்கள் சேவகன் என்றால் அமைச்சர் றிசாத் அவர்கள் என்பதை வட மாகாண மக்களிடையே கேட்டு அறிந்து கொள்ளலாம்
கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் இன ஐக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக, அமைச்சர் றிசாத் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வாழ்வாதார உதவிகளை செய்து வருவது இன்பராசாவின் கட்சிக்கு எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையலாம். அத்தோடு, அமைச்சர் றிசாத் தனது அரசியலை செய்ய முன் வந்தபோது கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். அதிலும், மட்டக்களப்பு மாவட்டம், அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் வாக்குகள் கணிசமான அளவு அமைச்சர் றிசாத் அவர்களின் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால் பீதியடைந்து ஏற்கனவே ஆதாரம் அற்ற பல குற்றங்களை அமைச்சர் மீது கூறி மூக்குடைந்து போனவர்கள் இன்று வாய் திறந்து, அமைச்சர் றிசாத் மீது ஆயுதம் என்றும் வாகனம் என்றும் ஆதாரம் அற்ற குற்றங்களை பேசுகின்றனர். இது அவர்களுக்கு பழக்கப்பட்ட தொழிலானாலும் இவைகளை கேட்டு சிரித்து பழக்கப்பட்டவர் அமைச்சர் றிசாத் என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது
வட மாகாணத்தின் எந்த மாவட்டத்திலும் தோல்வியடையாத அரசியல் தலைவனாகவும் கிழக்கு மக்கள் விரும்பும் தேசிய தலைவனாகவும் அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் வளர்ச்சியடைந்துள்ளதால் சிலரின் அரசியல் முடிவடையும் நிலையில் உள்ளது. அதனால், சில வெளிநாட்டு சக்திகள் இன்று அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியலை வீழ்த்த மறைமுகமாக செயல்படுகின்றன. அதில் வடக்கு – கிழக்கு இணைய வேண்டும் என்று விரும்பும் சக்திகளும் அமைச்சருக்கு எதிராக செயல்படுகின்றன. எனவே, இந்த சதிகார வெளிநாட்டு சக்திகளின் ஆலோசனையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இயங்குகின்றதா என சந்தேகம் எழுகின்றன. ஆனால், எந்த சக்திகள் மறைமுகமாக இயங்கினாலும் மக்களின் பிரார்த்தனையும், இறைவனின் சக்தியும் அமைச்சர் றிசாத் அவர்களை பாதுகாக்கும்
முஸ்லிம்களை பொறுத்தவரை ஆயுதம், அடிபிடி சண்டை என்பதை விரும்பாத மக்கள். அவர்கள் இறைவனை நம்பி சமதானம் பொறுமை என்பனவற்றை கடைபிடிக்கும் மக்கள். ஆயுத கலாச்சாரத்தை விரும்பாமல் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் ஆலோசனைக்கு அமைய அரசியல் நீரோட்டத்தில் இன ஐக்கியத்தை ஏற்படுத்த அரசியலுக்குள் வந்தவர்கள். இன்றும் அதே சமதான பாதையில் அஸ்ரப் அவர்களின் கொள்கையில் பயணிக்கும் அமைச்சர் றிசாத் அவர்களுடன் மக்கள் பயணிக்கின்றனர் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்
அன்று வட மாகாண முஸ்லிம் மக்கள் தனது சொத்துக்களை இழந்து உடுத்த உடையுடன் புலிகளின் கட்டளைக்கு அடிபணிந்து தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறிய போது, புலிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்க விரும்பாத முஸ்லிம் மக்களுக்கு இனியும் எதற்கு ஆயுதம் என்பதை இன்பராசா சிந்திக்க வேண்டும்
இனியும் நாட்டில் இனவாதம் ஆயுத கலாச்சாரம் என்பன உருவாகக்கூடாது. சகல இன மக்களும் சகோதரத்துடன் வாழ வேண்டும் என்று அமைச்சர் றிசாத் அவர்கள் செய்யும் அரசியல், மன்னார் மாந்தையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதை இனி எவராலும் அழிக்க முடியாது என்பதை இனவாதம் பேசுபவர்கள் புரிந்துகொண்டு நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை மக்களுக்கு நினைவுபடுத்தாமல் அடங்கி வாழ்வது நாட்டுக்கு செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.
(ஜெமீல் அகமட்)