அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் கிண்ணியா அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தொகுதி வாரியா? விகிதாசாரமாகவா? அல்லது கலப்பு தேர்தல் முறையா? என மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்திருந்தது.
இந்த நிலையில் குறித்த ஆணைக்குழு மூலமாக அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கு எதிராகவே எமது கட்சி உட்பட பலரது வாக்குகளும் வழங்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.
இதனை முன்வைத்த அமைச்சர் பைஸர் முஸ்தபா கூட எதிர்த்து வாக்களித்திருந்தார். அதிலும் புதுமையான ஒரு விடயம் தான் கலப்பு முறை என பல தடவைகள் நாடாளுமன்றில் உரத்துப் பேசிய மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாண அதிகாரத்தை மாகாணசபையில் கைப்பற்றுவதற்கும், ஏனைய மாகாணசபையில் அதிக ஆசனங்களைப் பெறும் நோக்கிலும் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.