முசலிப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 52.8 மில்லியன் ரூபா நிதியை முசலி பிரதேச சபைக்கு ஒதுக்கியுள்ளதாக மன்னார், முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் தெரிவித்துள்ளார்.
யுத்தகாலத்திற்கு பின் அபிவிருத்தியை கண்டு வரும் வடக்கு மாகாணம் இம்முறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, முசலி பிரதேசத்திற்கு பொருளாதார, சமூக செயற்பாடுகளில் அதிக அக்கறையுடன் அமைச்சர் செயற்பட்டு வருகின்றார். முழு வடக்கு மாவட்டத்திற்கு முடிந்தளவு நிதிகளை ஒதுக்கி அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் தனது அமைச்சு ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை இலங்கை முழுவதும் செயற்படுத்தி வருகின்றார்.
அதனடிப்படையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கென பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த, இன பாகுபாடுகளுக்கு அப்பால் அனைத்து பிரதேசத்திற்கும் சமமாக நிதி ஒதுக்கப்படுகின்றது. அந்தவகையில், இம்முறை தனது அமைச்சின் விஷேட செயற்த்திட்டத்தின் கீழ் குறித்த நிதி ஒதுக்கப்பட்டு, அபிவிருத்திகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உப தவிசாளர் தெரிவித்தார்.
குறித்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் முசலி பிரதேசத்தில் உள்ள உள்ளக வீதிகள் அபிவிருத்தி, தெருவிளக்குகள் இடும் நடவடிக்கை, மைதான அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.