வடக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர் அமைப்புக்களைச் சேர்ந்த 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் இந்தக் களப் பயணத்தில் இணைந்துகொண்டனர். அதில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் அதன் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையிலும், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை சிரேஷ்ட ஊடகவியலாளர் பகுர்தீன் தலைமையிலும், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் சிரேஷ்ட ஊடகவியலாளர் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையிலும் களத்தில் நின்று தரவுகளைச் சேகரித்து உண்மை நிலையை கண்டறிந்தனர்.
கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் சனிக்கிழமையும்,ஞாயிற்றுக்கிழமையும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள், அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் நேரடியாகக்கண்டு தரவுகளைத் திரட்டிக்கொண்டனர்.
ஊடகவியலாளர்களின் இந்தக் களப் பயணத்துக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆதரவு வழங்கியிருந்ததோடு, ஊடகவியலாளர்களின் இந்தப் பயணத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கான உதவிகளையும் செய்து கொடுத்திருந்தார்.
வடக்கு மாகாணத்திலிருந்து புலிகள் அமைப்பினரால் 01 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 28 வருடங்கள் – அடுத்த மாதத்துடன் (ஒக்டோபர்) நிறைவடைகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகவியலாளர்களின் இந்தக் களப் பயணத்தின் போது மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு வீட்டுத் திட்டங்கள், வீதி அபிவிருத்தி, மின்சாரம், நீர், வாழ்வாதார உதவிகள், பாடசாலைகள் நிர்மாணம் என பல்வேறுபட்ட உதவிகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு செய்து தந்துள்ளதாகவும் குறித்த மக்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, குறித்த வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு உதவிய அமைச்சர் றிஷாட் பதியுதீன், தொடர்ந்தும் அவரால் மட்டுமே மிகக்கூடுதலான உதவிகள் எங்களுக்கு வந்து சேருவதாக குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தங்கள் பகுதிகளுக்கு செய்கின்ற சேவைகளுக்கு தமிழ் மக்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஒரு தமிழராக இருந்திருந்தால் அவருக்கு சிலைவைத்து வணங்கியிருப்போம். என்று ஒரு தமிழ் இளைஞர் குறிப்பிட்டார்.
இவ்வாறு யுத்தத்திற்கு பின்னராக பாதிக்கப்பட்ட மக்களை அப்பிரதேசங்களுக்கு வந்து சந்தித்து, குறைகளைத் தீர்க்கும் ஒருவராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே இருப்பதாக அப்பிரதேச பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.
-எஸ்.அஷ்ரப்கான்-