Breaking
Mon. Nov 25th, 2024

ஊடகப்பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பெயரில் மாத்திரமின்றி கொள்கையிலும் மக்களுக்காகவே பணியாற்றி வருவதாக  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தேவன்பிட்டி கிராமத்திற்கான தேவாலய சுற்றுப்புற பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் நிகழ்வு  மாந்தை பிரதேச சபைத் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்…

தமிழ், முஸ்லிம், என்ற இன வேறுபாடு, மத வேறுபாடு, மொழி வேறுபாடு என்ற பாரபட்சமின்றி தேவையுடைய மக்கள் என்ற அடிப்படையில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றோம். அந்த வகையில் மாந்தை பிரதேச சபை மக்களுக்கு நாங்கள் பாரிய கடமைப் பட்டிருக்கின்றோம். அதே போன்று நாங்கள் வாக்களித்த வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்து வருகின்றோம்.

கடந்த பிரதேச சபைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை மாத்திரம் வென்றெடுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை நடைபெற்ற தேர்தலில் 13 ஆசனங்களில் 11 ஆசனங்களை பெற்று சபையை கைப்பற்றியது. இது எமது கட்சியின் மீதும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதும் தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மற்றும் அன்பினை முழுமையாக வெளிப்படுத்துகின்றது.

குறிப்பாக தேவன்பிட்டி கிராம மக்களுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். பல தடைகளுக்கு மத்தியில் எமது கட்சிக்காக போராடி முழு கிராமமும் இணைந்து எமது கட்சிக்கொரு உறுப்பினரை பெற்றுத்தந்தமைக்கு நன்றி கூறுகின்றோம். இந்தக்கிராமத்தை எங்களுடைய சொந்த கிராமமாக பார்க்கின்றோம். இங்கு இருக்கின்ற அடிப்படை தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தர ஆவலாக இருக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடக்கு பணிப்பாளர் முனவ்வர், மீள்குடியேற்ற செயலணி மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், மற்றும் மாந்தை இணைப்பாளர் சனூஸ் ஆகியோரும், மாதர் சங்கம், மீன்பிடிச்சங்கம் கிராம மக்கள் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post