இன, மத, கட்சி பேதமற்ற அரசியல் அபிவிருத்தியை திருகோணமலை மாவட்டத்தில் எனது ஆரம்ப காலம் தொட்டு நடை முறைப் படுத்தி வருகிறேன் இன்றும் அதைத்தான் செய்து வருகிறேன். இனக் குரோதமற்ற சமாதான சூழலினை உருவாக்க திருகோணமலை மாவட்ட மூவின மக்களும் உறுதி பூண்டுள்ளார்கள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
பதவிசிறிபுர பகுதியில் ஐந்து வீதிகளுக்கான கொங்ரீட் இடும் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யுத்த காலத்தின் பின்பும் பதவிசிறிபுர கிராமம் அபிவிருத்தியடைய வேண்டியுள்ளது. அதற்கான ஒத்துழைப்புக்களை இப்பகுதி மக்கள் வழங்க வேண்டும். சமாதானமான சமனான சேவையை எவ்வித பாகுபாடுமின்றி அபிவிருத்தியடைய செய்வதற்கான மூவினங்களும் ஒற்றுமையாக வாழும் மாவட்டத்துக்கு முன்னுதாரணமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய நிலையில் பிரதியமைச்சோ, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சோ எதுவும் இன்மை காரணமாக இவ்வாறான அபிவிருத்திகளை பல சிரமங்களுடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நீண்ட காலமாக அபிவிருத்திகள் இடம் பெறுவதில்லை. இனி வரும் காலங்களில் அபிவிருத்திகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தங்களது மேலான ஒத்துழைப்புக்களை எனக்கு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
(ன)