நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. ஊடகவியலாளர்களே சுதந்திரமாக செயற்பட முடியும் மௌனித்து இருக்க வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண இலங்கை வங்கிக்கான காரியாலயமும் திருகோணமலை மேற்தரக் கிளையின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தையும் நேற்று முன்தினம் (03) திருகோணமலையில் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இலங்கை வங்கியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொணால்ட் சீ பெரேரா, இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் செனரட் பண்டார, கிழக்கு மாகாண முன்னாள் காணி வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டாக்டர். அருணசிறிசேன உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் மற்றும் இலங்கை வங்கி கிளை முகாமையாளர்கள், வங்கி ஊழியர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கூறியதாவது,
அன்றைய ஒரு காலகட்டங்களில் வடக்கிலும் தெற்கிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். ஊடகவியலாளர் எஹலியகொட தொடக்கம் வடக்கில் 17 ஊடகவியலாளர்களும், தெற்கில் 36 ஊடகவியலாளர்களும் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால், நல்லாட்சி அரசில் எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் அப்படி நடக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தை பொறுத்தமட்டில் சுயாதீன ஆணைக் குழுக்கள், நீதிமன்ற ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு என உருவாக்கப்பட்டு ஊடகங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய கால சூழ்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல், கொலை என பல பயங்கரமான நிலை தோற்றம் பெற்றது.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் திருகோணமலை மண் பாரிய பங்களிப்புச் செய்தது. 2.23 வீதமான வாக்குகளை திருகோணமலை மண் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அளித்திருந்தது. ஆனால், இம் மாவட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் எதுவுமே இல்லை. 51.13 வீதமான வாக்குகள் நல்லாட்சியை உருவாக்கியது திருகோணமலை மாவட்டத்தில் அதிலும் மூதூர் தொகுதி சார்பாக கணிசமான வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிக்கு கிடைக்கப் பெற்றது. இம் மாவட்ட வாக்குகள் குறைவாகியிருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால வர முடியாது.
1939 ம் ஆண்டு இலங்கை வங்கி இலங்கையில் உதயமாகியது. திருகோணமலை மாவட்டத்துக்கு 1945 ல் 6 வது கிளையாக ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 க்கு மூன்று வருடத்துக்கு முன் திருகோணமலை யில் இலங்கை வங்கி உதயமாகியிருந்தால் கேந்திர முக்கியத்துவமிக்க மாவட்டமாக கிழக்கு தென்கிழக்காசியாவில் முக்கியம் பெற்றிருக்கும்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கட்டுவித்த 101 டாங்கிகளும் அன்றைய சுதந்திரத்திற்கு முன்பு இருந்தது. நாட்டின் பல சமூகங்கள் வாழ்ந்தாலும் திருகோணமலை மாவட்ட மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். முஸ்லீம்கள் 44 வீதமும், 32 வீதம் தமிழ் மக்களும், 25 வீதம் சிங்கள மக்களும் இம் மாவட்டத்தில் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். நான் பாடசாலை மாணவனாக இருக்கின்ற பருவத்தில் இருந்து இன்று வரை இலங்கை வங்கியில் ஐந்து இலட்சத்துக்கும் குறையாத பணத் தொகையை சேமிப்பில் வைத்துள்ளேன் என்றார்.
-ஹஸ்பர் ஏ `ஹலீம்-