Breaking
Fri. Nov 15th, 2024

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அடம்பன் பிரதேசத்தில் பள்ளிவாசல் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்ட அடிக்கல் நாட்டு விழா நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய ரிப்கான் பதியுதீன் கூறியதாவது,

“அடம்பன் எனப்படுகின்ற இந்த கிராமமானது இன்று ஒருபாரிய குடியேற்றத்தைக் கொண்ட ஒரு கிராமமாக காணப்படுகின்றது. ஆனால் யுத்தத்திற்கு முன்பு அடம்பன் என்னும் கிராமம் வியாபார சந்தைக்கு பிரசித்தி பெற்ற ஒரு வியாபாரஸ்தளமாகும். அன்றைய  காலங்களில் இந்த பள்ளிவாசலானது வியாபாரத்திற்கு வருபவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது யாராலும் மறக்க முடியாது. ஆனால் இன்று இக்கிராமம், மக்கள் குடியேற்றத்துடன் சிறப்பாக காணப்படுகின்றது.

அந்த வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அடம்பன் மக்களை கெளரவப்படுத்தும் முகமாக, முதற்கட்டமாக இந்த இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பள்ளிவாயலை பாதுகாக்கவும், மரக்கன்றுகளை வைத்து பராமரிக்கவும், இச் சுற்றுமதிலுக்கான நிதியினை ஒதுக்கி, அதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு இன்று நடைபெறுகின்றது.

இவ்வாறு அமைச்சர் அவர்கள் உங்களுக்காகவும் உங்கள் கிராமங்களுக்காகவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். உங்களின் எதிர்கால நடவடிக்கைகளை இலகுவாகவும், சிறந்த ஒரு பிரதேசமாக மாற்றவும் பல திட்டங்களை வகுத்திருக்கின்றார். எனவே, நீங்கள் அமைச்சருக்கு வழங்கிய வாக்குகளுக்கு, அமைச்சரும் அவருடைய அணியினரும் நன்றியோடு இருக்கின்றார்கள். அதே போன்று, உங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ச்சியாக செய்துவரும் அமைச்சருக்கு, நீங்களும் நன்றியோடு இருக்க வேண்டும். உங்களுக்காக ஒரு தவிசாளர், ஒரு உப தவிசாளர், ஏனைய பன்னிரண்டு உறுப்பினர்களை சேவை செய்வதற்காக பிரதேச சபையொன்றை அமைத்திருக்கின்றார். இவ்வாறு உங்களை பற்றி சிந்திக்கும் தலைவனுக்கு நீங்கள் செய்ய வேண்டியது அவருடைய நீண்ட வாழ்க்கைக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதேயாகும்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாந்தை பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாணப் பணிப்பாளர் முனவ்வர், அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் முஜிபுர்ரகுமான், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் முபாரக் மெளலவி, மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post